செய்திகள்,முதன்மை செய்திகள் உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!…

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!…

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!… post thumbnail image
பாரீஸ்:-நாட்டின் பாதுகாப்புக்காகவும், மற்ற நாடுகள் திடீர் தாக்குதல் நடத்தும்போது அவர்களை எதிர்கொள்ளவும் பல நாடுகளும் ஆயுத இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவும் பல நாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளின் ஆயுத இறக்குமதி குறித்து ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் நிலை குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

2009-2013 இடைப்பட்ட 5 ஆண்டு காலத்திலும், அதற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, உலக நாடுகளிடையே ஆயுத விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.இறக்குமதியை பொருத்தவரையில், இந்த காலக்கட்டத்தில் இந்தியா அதிகளவில் ஆயுதங்களை வாங்கி உள்ளது. 2004- 08ம் ஆண்டில், வாங்கியதைவிட தற்போது 111 சதவீதம் கூடுதலாக ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது.அதாவது உலக நாடுகளின் ஆயுத இறக்குமதியில், இந்தியாவின் பங்கு 7ல் இருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு 2009- 13ம் ஆண்டில், அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடு ரஷ்யா. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 75 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. நவீன காலத்துக்கேற்ப ஆயுதங்களைப் பெற்று வரும் இந்தியா, சில ஆண்டுகளுக்கு முன், விமானம் தாங்கி போர்க்கப்பல் விவகாரத்தினால் ரஷ்யாவுடன் முரண்பட்டு வந்தது.

தற்போது ரஷ்யா ஆயுதங்கள் வழங்கியதன் மூலம், இந்தியாவின் நட்பு நாடாக மாறியுள்ளது. ரஷ்யாவை தவிர்த்து, மற்ற நாடுகளிடம் இருந்து மிகவும் குறைந்த அளவே இந்தியா ஆயுதங்களை வாங்கியுள்ளது. அமெரிக்காவிடம் 2009-13ம் ஆண்டில் 7 சதவீத அளவுக்கு ஆயுதங்களை பெற்றுள்ளது. 2009-13ம் ஆண்டில் பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதியை 119 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சியாகும். உலக அளவில் 5 சதவீதமாகும்.2009-13ம் ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்கா 29, ரஷ்யா 27, ஜெர்மனி 7, சீனா 6 மற்றும் பிரான்ஸ் 5 சதவீதங்கள் என ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இது மொத்தமாக 74 சதவீத ஏற்றுமதியாகும். உலகிலேயே மிக அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் 2010ம் ஆண்டு சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. நம்பகத்தன்மை இல்லாத அண்டை நாடான சீனாவால் இந்தியாவின் பாதுகாப்புச் செலவு அதிகரித்தது. தற்போது, உலகத்திலேயே ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தைப் பிடித்து மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை சீனா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் பிடித்து ‘டாப் 5’ல் உள்ளன. இவ்வாறு ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி