செய்திகள்,திரையுலகம் கோவலனின் காதலி திரை விமர்சனம்…

கோவலனின் காதலி திரை விமர்சனம்…

கோவலனின் காதலி  திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் திலீப் குமாரும், நாயகி கிரண்மையும் பாண்டிச்சேரியில் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். நாயகனுக்கு நாயகி மீது ஒரு தலை காதல். ஆனால் நாயகியோ ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் காதல் என்பதை நினைக்காமல் இருந்து வருகிறார்.

வறுமையால் கல்லூரி கட்டணத்தை செலுத்த பணம் இல்லாமல் தவிக்கிறார் கிரண்மை. அப்போது அவரின் தோழி, பெரிய செல்வந்தர்களின் ஆசைக்கு இணங்கினால் நிறைய பணம் கிடைக்கும். அதன்மூலம் கல்லூரிப் படிப்பையும் தொடரலாம், சந்தோஷமாகவும் வாழலாம் என யோசனை கூறுகிறாள்.முதலில் மறுக்கும் கிரண்மை, பிறகு இதற்கு சம்மதிக்கிறாள். ஒரு புரோக்கரை கிரண்மைக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் அவருடைய தோழி. அந்த புரோக்கர் ஒருநாள் கிரண்மையை தொழிலதிபரான கசம்கானிடம் அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று தனது பிரச்சினையைக் கூறும் கிரண்மையை ஆறுதல்படுத்துகிறார் கசம்கான். அவரின் அரவணைப்பு, பண மோகம் கிரண்மையை கிரங்கவைக்க அவருடைய ஆசைக்கு இணங்குகிறாள். கசம்கானும் இவளென்றால் உயிராய் இருக்கிறார். இருவரும் பாண்டிச்சேரி முழுவதும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள்.

ஒருநாள் கிரண்மையை காதலிக்கும்படி நாயகன் திலீப்குமார் தொந்தரவு செய்ய, இதை கிரண்மை கசம்கானிடம் கூறுகிறாள். கசம்கான் அந்த ஊரின் குப்பத்து தலைவரான ‘காதல்’ தண்டபாணி உதவியுடன் திலீப்குமாரை கொலை செய்கிறார். இந்நிலையில், இவர்களுடைய நெருக்கத்தின் பலனாக கிரண்மை கர்ப்பமாகிறார். டாக்டரிடம் சென்று கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கிறார் கிரண்மை. ஆனால், 5 மாதங்கள் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என டாக்டர் கைவிரிக்கிறார்.இந்நிலையில், கசம்கான்-கிரண்மைக்குண்டான தொடர்பு கசம்கானின் வீட்டுக்கு தெரிய வருகிறது. இதை எதிர்க்கும் கசம்கானின் மனைவியும், மகளும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அவரை மிரட்டுகிறார்கள். இறுதியில் கிரண்மையை கைவிட்டு விடுவதாக அவர்களிடம் உறுதிகூறுகிறார் கசம்கான்.யாருடைய அரவணைப்பும் இன்றி தனிமையில் விடப்பட்ட கிரண்மையின் வாழ்க்கை அதன்பிறகு என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

நாயகன் திலீப் குமார் படத்தில் இரண்டு பாடல்களுக்கு டூயட் ஆடுவது, ஒரு சண்டைக்காட்சி என ஒரு சில காட்சிகளே வருகிறார். இதனால் இவர் நடிப்பதற்குண்டான வாய்ப்பு மிகவும் குறைவே. மற்றபடி, பாடல் காட்சிகளில் அழகாக நடனமாடியிருக்கிறார்.
நாயகி கிரண்மை மகிழ்ச்சி, சோகம், அழுகை, கோபம், காதல், ரொமான்ஸ், கவர்ச்சி என இன்றைய முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரைச் சுற்றித்தான் கதை நகர்கிறது என்பதால் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. என்றாலும், தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார்.

தொழிலதிபராக வரும் கசம்கான் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார். நாயகி மீது பாசமும், நாயகிக்காக கொலை செய்யுமளவுக்கு துணியும் கொடூர வில்லனாகவும் பன்முகம் காட்டியிருக்கிறார். குப்பத்து தலைவராக வரும் ‘காதல்’ தண்டபாணி தனது குப்பத்து ஜனங்களின் வாழ்க்கைக்காக என்ன வேணும்னாலும் செய்யக்கூடிய கதாபாத்திரம்.கஞ்சா கருப்பு ஒரு சில காட்சிகள் வந்து சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்துள்ளார்.மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் ஒரு பெண், தன்னுடைய வறுமை காரணமாக தவறான பாதைக்கு சென்று சீரழிந்த கதையை படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அர்ஜுன் ராஜா. வறுமையை பயன்படுத்தி தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் பணமுதலைகளிடம் பெண்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். படத்திற்கு மற்றொரு பலம் இப்படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள்தான். நிறைய வசனங்கள் சிந்திக்க வைப்பவையாக உள்ளன.

சிவசங்கர் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பலவீனமாக உள்ளது. பாரதி இசையில் ‘மெல்ல மெல்ல காதல் சொல்ல’ பாடல் முணுமுணுக்க வைக்கும் ரகம். குப்பத்து ஜனங்களின் வாழ்க்கையை சொல்லும் ‘ஆசையில்லா மனுஷன் இங்க யாருடா’ என்ற பாடல் குத்தாட்டம் போடவைக்கிறது. மற்ற பாடல்களும் பரவாயில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘கோவலனின் காதலி’ உண்மையின் வடிவம்…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி