அரசியல்,முதன்மை செய்திகள் புலி கதை சொல்லும் ஸ்பெக்ட்ரம் முதலைகள்…

புலி கதை சொல்லும் ஸ்பெக்ட்ரம் முதலைகள்…

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்பும் வகையிலேயே விடுதலைப் புலிகளால் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிளப்பியுள்ளனர். உண்மையில் இவர்களால்தான் தமிழ் இனத்திற்கே பேராபத்து உள்ளது என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இன்றைய நிலையில் இலங்கையின் சூழலும் இந்தியாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த இரு நாடுகளிலுமே குடுமப சர்வாதிகார ஆட்சியின் கீழ் மக்கள் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் சூழலோ அறிவிக்கப்படாத மிசா காலத்தைப் போன்று இருக்கிறது. கருணாநிதி குடும்பத்தின் அடக்குமுறையின் கீழ் மக்கள் அஞ்சி நடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது .இருபது லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வருகிற பொங்கள் கண்ணீர் பொங்கலாக இருக்குமோ என்று கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள்.

இயற்கை அனர்த்தனத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களுக்கோ, உடமைகளுக்கோ உரிய இழப்பீடுகள் இன்றி விழி பிதுங்கி நிற்கும் விவசாயிகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வரலாறு காணாத‌ விலை உயர்வு ஏழைகளை பட்டினியில் விளிம்பிற்குத் தள்ளி விட்டது.

முற்றிலுமாக நிலை குலைந்து விட்ட ஒரு மக்கள் விரோத நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் சூட்டப்பட்ட மகுடம் போல ஸ்பெக்ட்ரம் ஊழல் இருக்கிறது.

விலைவாசி குறித்தோ, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகள், மக்கள் குறித்தோ கவலைப்படாமல் இளைஞன் பட விழாக் கொண்டாட்டத்தில் குஷியாக இருந்த கருணாநிதி பல ஆயிரக்கணக்கான கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தினம் தோறும் சி,பி.ஐ சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் பதறிப் போகிறார்.

இந்த ரெய்டுகளுக்கு காரணமான டெல்லி காங்கிரஸ்காரர்களை கண்டிக்க வக்கற்ற கருணாநிதி அவர்களைக் குஷிப்படுத்தவும், மக்களின் கவனத்தில் இருந்து பிரச்சனையை திசை திருப்பவும் விடுதலைப்புலிகள் ஊடுருவி தன்னையும், பிரதமரையும் கொல்ல திட்டமிட்டிருப்பதாக காவல்துறையை ஏவி அறிக்கை வெளியிடுகிறார்.

ஒட்டு மொத்தமாக தமிழக மக்களுக்கு திமுக மீதும் கருணாநிதி மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் நோக்கில் ஈழத் தமிழர்களின் வாழ்வை பணையம் வைத்து காங்கிரசார் தன் மீது சுமத்திய களங்கத்தை போக்க‌, ஏலகிரியில் இருந்து எழுதிய திரைக்கதையை இப்பொழுது காவல்துறை மூலம் வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்த இவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்காக அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர். விடுதலைப்புலிகளால் இவர்களின் உயிருக்கு ஆபத்து அல்ல.இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார் சீ்மான்.

பெட்ரோல் விலை உயர்வுக்குக் கண்டனம்

முன்னதாக சீமான் வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

விலைவாசி உயர்வு விண்ணை தொட்டுவிடும் போல் இருப்பது கண்டு மக்கள் ஏற்கனவே துயரத்தில் உள்ளனர். இதில் தற்போது பெட்ரோல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் பெட்ரோல் விலை 8 முறை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 22ல் 3 ரூபாய் 1 காசும், ஏப்ரல் 1ல் 54 காசுகளும், ஜுன் 26ல் 3 ரூபாய் 79 காசுகளும், செப்டம்பர் 8ல் 10 காசுகளும், செப்டம்பர் 29ல் 29 காசுகளும், அக்டோபர் 15ல் 78 காசுகளும், நவம்பர் 8ல் 35 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை ரூ. 11.86 அதிகரித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக அளவில் மானியம் அளிப்பதாகவும், அதனால் அரசும், எண்ணெய் நிறுவனங்களும் நிதிச் சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுவது சற்றும் உண்மையில்லை.

2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையில் மட்டும் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ. 1,83,861 கோடி ஆகும். சுங்கத் தீர்வைகளைக் குறைத்தால் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பெட்ரோல் விலை நிர்ணய அதிகாரம் கடந்த ஜூன் மாதம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. இந்த அதிகாரத்தை திரும்பப் பெருவதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க முடியும்.

அரசுகள் மக்களின் நலனுக்காகத் தான் இருக்கின்றன. அரசுகளும் வர்த்தக நிறுவனங்கள் போன்று வருவாய் ஈட்டுவதில் குறியாய் இருக்கின்றன. இந்தப் போக்கை கைவிட்டு அரசுகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். இல்லையெனில் மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி