செய்திகள்

செய்திகள், பரபரப்பு செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா!

பெண் பத்திரிகயாளர்ளின் பாலியல் புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். பல துறை பிரபலங்கள் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் கலக்கம் அடைந்துள்ளனர். மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் மாட்டியிருக்கிறார்.பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். அவர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர் . ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் எந்த பதிலையும் அளிக்காமல் மவுனம் காத்துகொண்டு இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் , அரசு பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில் டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என கூறினார். இன்று மாலை அவர் தனது மந்திரி பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார். “தனிப்பட்ட முறையில் என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள விரும்புவதால் எனது பதவியில் இருந்து விலகுகிறேன்” என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள், முதன்மை செய்திகள்

சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்

சபரிமலையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.இந்து அமைப்புகள் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதியால் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்ல வந்தனர். ஆனால், அவர்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையும் வெடித்துள்ளது. பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். போலீசார் வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 5 பக்தர்கள், 15 போலீசார் காயமடைந்ததாகவும், 10 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கேரள அமைச்சர் கூறினார். இந்த வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்றும், போராட்டத்தின் பின்னணியில் அவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயராமன் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

செய்திகள், முதன்மை செய்திகள்

பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,- ” மராட்டியம் மற்றும் தென் மாநிலங்களில் கடுமையாக பாதிப்புகளை ஏற் படுத்தியுள்ள பன்றிக் காய்ச்சல், இப்போது தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தெற்கு எல்லையான திருநெல்வேலியில் தொடங்கி சென்னை வரை பலர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 4 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். திருச்சி தோகைமலையில் இன்னொருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, வேலூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 5 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவரும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார். ஆனால், வழக்கம் போலவே அவர் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்து விட்டதாக அறிவித்து, சென்னையில் பன்றிக்காய்ச்சல் பரவியதை மூடி மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இது அறியாமையை ஊக்குவித்து பன்றிக் காய்ச்சல் பரவத் தான் உதவுமே தவிர, தடுப்பதற்கு உதவாது. பன்றிக்காய்ச்சல் கடந்த 2009-ம் ஆண்டு தான் இந்தியாவில் பெரிய அளவில் பரவியது. அதற்குப் பிந்தைய 10 ஆண்டுகளில் நடப்பாண்டில் தான் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டிருப்பதால், பன்றிக் காய்ச்சலை நினைத்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க முடியும். பன்றிக் காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மட்டும் தான் பரவும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியேறிய வைரஸ்கள் கட்டிடங்களில் தரைகள், கதவுகள், நாற் காலிகள், மேசைகள் ஆகிய வற்றில் சில மணி நேரங்கள் முதல் இரு நாட்கள் வரை உயிர்வாழக்கூடும். அவற்றை தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும், வெளியிடங்களுக்கு சென்று வருபவர்கள் கைகளை சோப்புகளால் கழுவுவது, கழுவாத கைகளால் கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றை தொடாமல் தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தொலைவுக்கு விலகி இருப்பது மிகவும் பாதுகாப்பானதாகும். வடகிழக்கு பருவமழை எந்த நேரமும் தொடங்கக் கூடும் என்பதால் ஈரப்பதமான சூழலில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1 என்1 வைரஸ்கள் வேகமாகப் பரவக்கூடும். எனவே, இனியும் அரசு அலட்சியம் காட்டாமல் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்திகள், முதன்மை செய்திகள்

பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !

சபரிமலை கோவில் நடை நாளை முதல் முறையாக திறக்கப்படுகிறது. பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது . கேரள மாநில அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக அறிவித்தது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பற்பல அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்தன. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. பா.ஜனதா கட்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து 90 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட பேரணியை நடத்தியது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டடோர் பேரணியில் கலந்துகொண்டதால் திருவனந்தபுரம் ஸ்தம்பித்தது. பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீதரன்பிள்ளை பேசுகையில் ” தங்களது முதல்கட்ட போராட்டம் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் மாநில அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக இதை விட பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார். அரசின் தலையீட்டில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசும், தேவசம் போர்டும் உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தொடர்பான தீர்ப்பு வரும்வரை சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும் ” என்று இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வற்புறுத்தினார்கள். தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் “சபரிமலை கோவிலின் பாரம்பரியம், நம்பிக்கைகளை பாதுகாக்கவே விரும்புவதாகவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் ” என்றார். இந்நிலயில் சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை (17-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். நாளை முதலே சபரிமலை கோவிலுக்கு பெண் பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்து உள்ளன. சிவசேனா இது தொடர்பாக தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. சபரிமலை பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் சபரிமலை பாதுகாப்பு பணி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை. பெண் போலீசாரை அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்போவதில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

அரசியல், செய்திகள்

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!

டி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.அந்தப் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ” திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து ,முழு உருவச் சிலை வரும் நவம்பர் 15 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவுள்ளது. இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பாக டி.கே.எஸ்.இளங்கோவன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அதிமுகவினரை அழைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை ஆலோசிக்கமால் தன்னிச்சையாக கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

சின்மயி விவகாரம் : இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா ?!

இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு சென்று , மாணவ-மாணவிகளுடன் தனது இசை அனுபவங்கள் பகிர்ந்து உரையாடல் நிகழ்த்தி வருகிறார். மாணவ – மாணவியர் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகிறார்கள். இன்று சென்னை, எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா ” 4-வது தலைமுறையாக என்னுடைய பிறந்த நாளை இவ்வளவு ஆரவாரமாக கொண்டாடுவதில் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார். மாணவ – மாணவிகள் தங்கள் இடத்துக்கு அழைத்து பள்ளிக்கே ஒதுங்காத என்னை, என் பிறந்த நாளைக் கொண்டாடி பெருமைப்படுத்துவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இனியும், எந்த கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தாலும் ஆர்வமுடன் கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று இளையராஜா பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்து வந்தார்.அதில் சின்மயி வைரமுத்து விவகாரம் தொடர்பான #Metoo குறித்து கேள்வியெழுப்பப்பட்டது . அதற்கு இளையராஜா “இந்த கேள்வியை கேட்டுட்டு நீ இங்கேயே இரு கண்ணா… “என்று பதிலளித்துவிட்டு கடந்து சென்றார். இதற்கு முன்னர், சிம்பு-வின் பீப் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தபோது, அது குறித்த கேள்வி கேட்ட நிருபரை இளையராஜா காய்ச்சி எடுத்ததை மறந்திருக்க முடியாது.

செய்திகள், முதன்மை செய்திகள்

வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா – தமிழக முதல்வருக்கு அழைப்பு

சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழா குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது , இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே மிக சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிலை தொடக்கப்பணிகள், கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானமாக பெறப்பட்டது. பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலில் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி சிலை திறக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், குஜராத் மாநில அமைச்சர் கன்பத் சின்கா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து , விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை திறந்து வைக்கிறார். சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிக சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக மாற்ற குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

செய்திகள், பரபரப்பு செய்திகள்

பொய் குற்றச்சாட்டுகள்! வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு !

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை 2004ஆம் ஆண்டு படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறியிருந்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து வைரமுத்து சில நாட்கள் முன் கூறுகையில் ” அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று கூறியுள்ளார்.இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் கூறினார் வைரமுத்து .அவர் பதிவை ரீட்வீட் செய்த சின்மயி வைரமுத்துவை பொய்யர் என கூறினார். மீண்டும் இன்று அவர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் . அதில் “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. முற்றி உள்நோக்கம் கொண்டது. அது உண்மையாக இருந்தால் சம்பவந்தப்பட்டவர் வழக்கு தொடரட்டும்.” “சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒரு வாரமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.” “நீங்கள் வழக்கு போடலாம், சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும், நீதிக்கு தலை வணங்குகிறேன்” என்றார் வைரமுத்து.

செய்திகள், முதன்மை செய்திகள்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். 6 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராகவும் , 2006 – 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.கலைஞரால் பெரிதும் பாராட்டப்பட்டவர். திமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்தார். அவரது திடீர் மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள், பரபரப்பு செய்திகள்

வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை!!

டெல்லியில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர் மர்ம நபர்கள். டெல்லியில் உள்ள ஒரு கார்பரேஷன் வங்கியின் கிளையில் கேஷியராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார்(25). இவர் நேற்று மாலை பணி முடிந்து வங்கியை விட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். குண்டு தாக்கி ரத்த வெள்ளத்தில் தரையில் சந்தோஷ் குமார் தரையில் விழுந்தார். அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வங்கி வாசலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Scroll to Top