`அவங்க அப்பா எவ்ளோ பெரிய பணக்கார். பத்துக் கோடி ரூபாயைக் கொடுத்துதான் இந்தப் பையனை ஹீரோவா அறிமுகப்படுத்தி வெச்சாரு’ இந்தித் திரையுலகில் இன்று வரை ஏதோவோர் இடத்தில் யாரோ ஒருவர் இந்த விஷயத்தை எட்டு வருடங்களாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அந்தப் பையனும் பதில் சொல்லிவிட்டார். ஆனாலும், சர்ச்சை விடுவதாய் இல்லை. இன்றைக்கு கபில் தேவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார். பாலிவுட் `கான்’களுக்கு வசூலில் டஃப் கொடுத்து கலக்கிக்கொண்டிருக்கிறார். அந்தச் சர்ச்சை பையன்… ரன்வீர் சிங்.
ஒரே பாட்டுல ஹீரோ ஆகுற மாதிரியெல்லாம் ரன்வீரால் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துவிட முடியவில்லை. அவரோட ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோதான். ரன்வீர், மும்பையில் படித்தவர். காலேஜ் கல்சுரல் நிகழ்ச்சியில் ரன்வீரின் பர்ஃபாமன்ஸ்தான் எப்பவுமே டாப். மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். படிப்பை முடித்து சினிமா வாய்ப்புக்காகக் கதவைத் தட்டினார், ரன்வீர். எல்லோரும் சொன்ன ஒரே பதில், `இல்லை’ என்பதுதான். பாலிவுட் நண்பர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரிடமும் வாய்ப்பு தேடி அலைகிறார், ரன்வீர். இத்தனைக்கும் அனில் கபூருக்குத் தூரத்துச் சொந்தக்காரர் இவர்.
எல்லா வாய்ப்புகளும் `நோ’ சொல்ல, விரக்தியின் உச்சத்தில் விளம்பர நிறுவனம் ஒன்றில் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட்டார். ரன்வீர் சினிமாவை விடவில்லை. எங்கு சினிமா ஆடிஷன் நடந்தாலும், ரன்வீர் அங்கே இருப்பார். அந்தளவுக்கு சினிமாவைத் துரத்திக்கொண்டிருந்தார், ரன்வீர்.
ஒருவழியாக, 2010-ல் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நடத்திய ஆடிஷனில் இயக்குநரை ஈர்த்தார், ரன்வீர் சிங். `பேன்ட் பஜா பராத்’ படத்தில் பிட்டூ ஷர்மாவாக அறிமுகமானார். முதல் படமே ஹிட். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ரன்வீரை அழைத்தாலும், அனைத்துக்கும் ஓகே சொல்லாமல் நிதானம் காட்டினார். நடுவில் கொஞ்சம் சறுக்கல். ரன்வீர் இறங்குமுகம் காட்டுகிறார் என்று செய்திகள் வரத் துவங்கிய வேளையில்தான், ரன்வீர் தன் ஃபார்முலாவைக் கையிலெடுக்கிறார். அதாவது, மக்கள் தன்னை தினமும் திரையில் பார்க்கவேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி விளம்பரங்களில் நடிப்பது… நடித்தார். அன்று பலர் விமர்சித்தனர். இன்று பிக்பாஸில் கமலும் அதே விஷயத்தைச் சொல்கிறார்.
ரன்வீர் இந்த ஃபார்முலாவைக் கையிலெடுக்கக் காரணம், விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம். ஒருகட்டத்தில் பத்தில் மூன்று விளம்பரங்களில் ரன்வீர் இருப்பார் என்ற நிலை வர… மக்களின் பார்வை ரன்வீரை விட்டு அகலவே இல்லை. இதெல்லாம் டிரெய்லர்தான் மெயின் பிக்சரைப் பார்க்கலையே எனும் விதமாக ஓப்பன் ஸ்டேட்மென்டுகள் மூலம் தன்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றார். `நான் இதுவரை 26 பெண்களிடம் செக்ஸ் வைத்திருக்கிறேன். இருந்தாலும், எனக்கு ஆழமான நட்பிலும் காதலிலும் நம்பிக்கை இருக்கிறது’ என்று ரன்வீர் கூறியதும், மொத்த பாலிவுட்டும் கவனித்தது. இன்றுவரை கேமராக்களின் வெளிச்சத்திலேயே இருக்கிறார், ரன்வீர்.
விளம்பர ஸ்டன்ட்கள் இவரை வைரலின் உச்சத்திலேயே வைத்திருக்கிறது. அதற்காக இவரும் வான்டட் ஆக சில விஷயங்களைச் செய்தார். பல பிரபலங்கள் காண்டம் விளம்பரத்தில் நடிக்கத் தயங்கிய நேரத்தில், ரன்வீர் நடித்தார். அந்தக் காண்டம் விளம்பரத்துக்கு ஸ்கிரிப்ட், டைரக்ஷன் இரண்டும் ரன்வீர்தான். தவிர, அனுஷ்கா ஷர்மாவுடம் மோதல், சோனாக்ஷி சின்ஹாவுடன் காதல்… என மீடியாக்களைத் தன் பின்னால் ஓட வைத்துக்கொண்டே இருந்தார். சமீபத்தில், விரைவில் தீபிகாவுடன் திருமணம் என்ற அறிவிப்பு. இதுவும் பரபரப்புக்காக இருக்கும் எனப் பலரும் சொல்ல, நவம்பர் 10, 2018-ஐ தீபிகாவுக்கான காதல் தேதியாகக் குறித்து வைத்திருக்கிறார். இந்தக் கல்யாணம் இத்தாலியில் நடக்கவிருக்கிறது.
இந்த சர்ச்சைகளெல்லாம் ரன்வீருக்குக் களங்கத்தை ஏற்படுத்தவில்லை மாறாக, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய `கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா’ படத்தில் ரன்வீரை ஹீரோவாக்கியது. படமும் ஹிட். பாலிவுட்டில் கெத்து என்றால், 100 கோடி ரூபாய் கிளப்தான். ரன்வீரின் `பாஜிராவ் மஸ்தானி’ 350 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து `கான்’களை கவலையில் ஆழ்த்தியது.
மீண்டும் ரன்வீர் மீது புது விமர்சனம் வைத்தார்கள். சும்மா.. சும்மா எதையாவது பேசி லைம்லைட்ல இருக்கார் என்றார்கள். அதுக்கெல்லாம் ரன்வீரின் நடிப்பு `ஷட்டப்’ சொல்லியது. `பாஜிராவ் மஸ்தானி’ படத்துக்காக ராஜா போன்ற உடல் வேண்டும் என இயக்குநர் சொன்னதும், மாதக் கணக்கில் ஜிம்மே கதியெனக் கிடந்தார். அடிப்படையில், சாக்லேட் பாய் குரல் கொண்ட ரன்வீர், `பாஜிராவ் மஸ்தானி’யில் கம்பீர ராஜாவாகப் பேசவேண்டும். அந்த ராஜ குரலுக்காக 21 நாள்கள் ஒரே அறையில் முடங்கி, அந்தக் கம்பீர குரலைக் கொண்டுவந்தார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஏதாவது கமென்டுகளைத் தட்டி விடுவது, பாபா ராம்தேவ்வுடன் அவருக்கு இணையாக யோகா செய்து அசத்துவது, இன்ஸ்டாகிராமில் அழகிகளுடன் ஸ்டேட்டஸ் தட்டுவது என 24*7 லைம்லைட்டிலேயே இருக்கிறார், ரன்வீர். `பத்மாவத்’ படத்தில் அலாவுதின் கில்ஜியாக எல்லோரையும் வியக்க வைக்க ரன்வீரால் மட்டுமே முடியும். கபில்தேவ் பற்றிய `83′ படத்துக்கு ரன்வீர்தான் சரியாக இருப்பார் என்று இவரை கமிட் செய்திருக்கிறார்கள். ரன்வீரைப் போலவே அவரது வாழ்க்கையும் பிஸியாக இருக்கிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தாமதமாக வருவார் என்று `காபி வித் கரணி’ல் அர்ஜூன் கபூரே சொன்னது, டேட்டிங் பிரியர், விளம்பர உத்திகளால் லைம் லைட்டில் இருக்கிறார்.. இப்படியாக ஆயிரம் குறைகளை ரன்வீர்மேல் வைத்தாலும், இவரது நடிப்பை யாரும் குறை சொன்னதில்லை. `சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்பா!’ எனச் சொல்வதைப் பார்த்தால், ரன்வீர் கோலிவுட்டின் சிம்புவை நினைவுபடுத்துகிறார்.
ரன்வீர் சிங் என்பவரை சர்ச்சைகள் சுற்றவில்லை. சர்ச்சைகள் ரன்வீரைச் சுற்றி இருக்கும்படி அவரே அமைத்துக்கொள்கிறார். இதுதான் ரன்வீரின் பலம். ஹாப்பி பர்த்டே ரன்வீர்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி