சர்கார்
படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் இருப்பதற்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் வாயில் சிகரெட் வைத்திருப்பது போல் உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புகையிலை பொருட்களை தடை செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் நடிகர் விஜய் ஏன் அதை ஊக்குவிக்க வேண்டும் என்பன போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, ” இந்தியாவில் புகையிலை பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், புற்றுநோய் வேகமாக பரவி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை உள்ளது. அதேபோல், ‘டிவி’ மற்றும் சினிமா தியேட்டர்கள் என ஊடகங்கள் அனைத்திலும், புகையிலை பொருட்களுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி நடிகர்கள், தங்கள் படங்களில், ‘சிகரெட்’ பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகின்றனர். இயக்குனர்களும், ‘சிகரெட்’ பிடிக்கும் காட்சிகளை, வெவ்வேறு கோணங்களில் எடுத்து, இளைய சமுதாயத்தினரிடம், விஷம பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் நடிகர் விஜய், ‘சிகரெட்’ பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இது இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதனால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர், ‘சிகரெட்’ புகைத்து, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆட்பட்டு விடுவரோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாசை அழைத்து பேசி, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடவடிக்கைகை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சமுதாய சீரழிவை ஏற்படுத்தும் நடிகர் மற்றும் இயக்குனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி