80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம் உலுக்கியதில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன. 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தாராஹரா கோபுரம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 200 பேர் உயிரிழந்தனர். கடந்த 10 வருடங்களாக இந்த கோபுரத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள் கோபுரத்தின் எட்டாவது மாடியில் நின்று காத்மாண்டு நகரின் அழகை ரசித்து கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அவர்களில் பலரும் பலியாக நேரிட்டது. அதில் இதுவரை 200 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காத்மாண்டுவில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு இடவசதி இல்லாததால் திறந்த வெளியிலும், தற்காலிக கூடாரங்கள் அமைத்தும் மருத்துவ குழுவினர் போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி