செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா அணி விலக முடிவு?…

ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா அணி விலக முடிவு?…

ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா அணி விலக முடிவு?… post thumbnail image
மும்பை:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி மே 24-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக விளங்கி வரும் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின், கடந்த ஆண்டு (2014) நடந்த சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவர் இறுதிப்போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

பந்து வீச்சு தடை காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகிய சுனில் நரின், இங்கிலாந்தில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அங்கீகாரம் பெற்ற பந்து வீச்சு பரிசோதனை மையத்தில் தானாக பந்து வீச்சை சோதனைக்கு உள்ளாகி தனது பந்து வீச்சு விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதை நிரூபித்தார். இருப்பினும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சுனில் நரின் பந்து வீச அனுமதி அளிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் சுனில் நரின் பந்து வீச்சுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அப்படி செய்யப்பட்டு இருந்தால் அவரை பந்து வீச்சு சோதனைக்கு ஐ.சி.சி. அழைத்து இருக்கும். சுனில் நரினை குறி வைக்கும் நோக்கில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே சுனில் நரின் பந்து வீச்சுக்கான தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்க வேண்டும் என்று நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியாவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சுனில் நரின் விளையாட அனுமதி அளிக்கப்படாவிட்டால் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் இதனை கொல்கத்தா அணி தரப்பில் யாரும் உறுதி செய்யவோ? மறுக்கவோ? இல்லை. சுனில் நரின் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒன்றிரண்டு நாட்களில் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையில் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஜேம்ஸ் நீஷம் (நியூசிலாந்து), தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கும் கிறிஸ்லைன் (ஆஸ்திரேலியா) ஆகியோருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர்கள் அஷார் மக்மூத் (பாகிஸ்தான்), ஜோகன் போத்தா (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மக்மூத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும், ஜோகன் போத்தா ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் விளையாடிய அனுபவம் படைத்தவர்கள் ஆவார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வங்காளதேச அணி அடுத்த மாதத்தில் விளையாட இருப்பதால் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்) முதல் இரண்டு ஆட்டங்களில் மட்டும் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி