இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா தொடர்ந்து 4 சதம் அடித்து ஒருநாள் போட்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவர் வங்காளதேசத்துக்கு எதிராக 105 ரன்னும், இங்கிலாந்துக்கு எதிராக 117 ரன்னும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்னும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 124 ரன்னும் தொடர்ந்து எடுத்து முத்திரை பதித்தார். வேறு எந்த ஒரு வீரரும் தொடர்ந்து 4 சதம் அடித்தது கிடையாது.
மேலும் சங்ககரா விக்கெட் கீப்பிலும் புதிய சாதனை படைத்தார். கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் 54 பேர் அவுட் ஆக காரணமாக இருந்தார். இதன் மூலம் கில்கிறிஸ்ட் சாதனையை (52) அவர் முறியடித்தார்.
எந்த உலக கோப்பையிலும் இல்லாத அளவுக்கு 38 சதங்கள் அடிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் சதம் அடிக்கவில்லை.வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் 64 பந்தில் 150 ரன்னை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார். ஏற்கனவே குறைந்த பந்தில் அரைசதம், சதம் அடித்த சாதனை வீரராக அவர் திகழ்ந்தார்.
கிறிஸ்கெய்ல்– சாமுவேல்ஸ் ஜோடி ஜிம்பாப்வேக்கு எதிராக 2–வது விக்கெட்டுக்கு 373 ரன் குவித்து சாதனை படைத்தது. ஒரு நாள் போட்டி வரலாற்றில் எந்த ஒரு ஜோடியும் எவ்வளவு அதிகமான ரன்னை எடுத்தது இல்லை.இதேபோல தென் ஆப்பிரிக்காவின் மில்லர்– டுமினி ஜோடி 5–வது விக்கெட்டுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்சின் சைமான் அன்வர்- ஜாவித் ஜோடி 7–வது விக்கெட்டுக்கு உலக கோப்பையில் சாதனை படைத்தது.ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன் குவித்து சாதனை படைத்தது. இந்தியாவின் உலக கோப்பையை சாதனை (413 ரன்) முறியடிக்கப்பட்டது.
இந்த உலக கோப்பையில் 3 முறை 400 ரன்னுக்கு மேல் குவிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அணி அயர்லாந்துக்கு எதிராக 411 ரன்னும், வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 408 ரன்னும் குவித்தது.350 ரன்னில் இருந்து 400 ரன்னுக்கு மேல் 7 முறை எடுக்கப்பட்டது சாதனையாகும்.ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 275 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் முலம் இந்தியாவின் உலக கோப்பை சாதனை (257 ரன்னில் பெர்மூடாவை வீழ்த்தி இருந்தது) முறியடிக்கப்பட்டது.இதேபோல இந்த உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவும் 257 ரன்னில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இருந்தது.
ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்தில் மொத்தம் 688 ரன் குவிக்கப்பட்டது. இது சாதனையாகும். கடந்த உலக கோப்பையில் இந்தியா – இலங்கை மோதிய ஆட்டத்தில் மொத்தம் 676 ரன் குவிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் இந்த உலக கோப்பையில்தான் அதிகமாக இருந்தது.28 முறை 4 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றப்பட்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஸ்டீவ்பின், தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் டுமினி ஆகியோர் ஹாட்ரிக் சாதனை புரிந்தனர்.
இந்த உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 7 முறை எதிர் அணியை ‘ஆல்அவுட்’ செய்து சாதனை படைத்தது.70 விக்கெட்டுகளில் உமேஷ் யாதவ் அதிகமாக 18 விக்கெட் கைப்பற்றினார். அவருக்கு அடுத்தப்படியாக முகமது ஷமிக்கு 17 விக்கெட் கிடைத்தது.ரசிகர்களின் ஆதரவு இந்த உலக கோப்பையில் அமோகமாக இருந்தது. மைதானத்தில் சென்று பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையும், டெலிவிஷனில் நேரில் பார்த்தவர்களில் எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்தப்பட்டது.இந்த உலக கோப்பையில் பெரும்பாலான ஆட்டங்களில் மிகுந்த பரபரப்பு, விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது. ஒரு சைடு ஆட்டமாகவே அமைந்தது.
நேற்றைய இறுதிப் போட்டி, இந்தியா – ஆஸ்திரேலியா அரை இறுதி, 4 கால் இறுதி மற்றும் பெரும்பாலான ஆட்டங்களில் சுவாரசியம் இல்லாமல் ஒரு பகுதி ஆட்டமாகவே இருந்தது. தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து மோதிய அரை இறுதி, ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மோதிய லீக் ஆட்டம், ஆப்கானிஸ்தான்– ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி