செய்திகள்,விளையாட்டு நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை…

நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை…

நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை… post thumbnail image
ஆக்லாந்து:-11-வது உலக கோப்பை கிரிக்கெட்டில் பெரும்பாலானோரின் கணிப்பு படியே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 3 ஆட்டங்களில் புதிய உலக சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் ஆக்லாந்தில் நாளை சந்திக்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து அணி மீது இந்த முறை எதிர்பார்ப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் தோல்வியே சந்திக்காமல் அந்த அணி தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்து அரைஇறுதியை எட்டியுள்ளது. வலுவான பேட்டிங், ஆக்ரோஷமான பந்து வீச்சு மற்றும் அதிரடி தாக்குதல் யுக்தி இவற்றை கச்சிதமாக செய்வதால் அந்த அணி, மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறது.

40 ஆண்டுகளாக உலக கோப்பையில் பங்கேற்று வரும் நியூசிலாந்து அணிக்கு இதுவரை உலக கோப்பை கனிந்ததில்லை. ஏன் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறியது கிடையாது. 7-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியிருக்கும் நியூசிலாந்து அணி இதற்கு முன்பு அரைஇறுதியில் எப்படியெல்லாமல் சோடை போனது என்பதை இங்கு பார்ப்போம்.

1975: முதலாவது உலக கோப்பையில் அரைஇறுதியை எட்டிய நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுடன், லண்டன் ஓவலில் மோதியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிளைன் டர்னர் (36 ரன்), ஜெப் ஹோவர்த் (51 ரன்) ஜோடி பிரிந்ததும், விக்கெட்டுகள் சீட்டுகட்டு போல் சரிந்து நியூசிலாந்து 52.2 ஓவர்களில் 158 ரன்களில் சுருண்டது. இந்த இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி 40.1 ஓவர்களில் அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1979: இந்த முறை இங்கிலாந்தை மான்செஸ்டரில் நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியால் 60 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 212 ரன்களே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது, இங்கிலாந்தின் இயான் போத்தம் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து, தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். ஜான்ரைட் (69 ரன்), கேப்டன் மார்க் பர்கெஸ் (10ரன்) ஆகியோரின் ரன்-அவுட், நியூசிலாந்தின் இறுதி வாய்ப்பை பாதித்து விட்டது.

1992: ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் (இதே இடத்தில் தான் நாளையும் நியூசிலாந்து அரைஇறுதியில் ஆடுகிறது) நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுடன் மோதிய அரைஇறுதி மோதல் இது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மார்ட்டின் குரோவ் 91 ரன்கள் எடுத்தார். பின்னர் பாகிஸ்தான் பேட் செய்த போது, ஒரு தருணத்தில் நியூசிலாந்தின் கையே ஓங்கி இருந்தது. அதாவது 15 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 123 ரன்கள் தேவைப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் அனுபவமற்ற வீரராக களம் புகுந்த இன்ஜமாம் உல்-ஹக் 37 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன்கள் விளாசி ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திரும்பினார். 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ், தசைப்பிடிப்பால் பீல்டிங் செய்ய வரவில்லை. ஜான்ரைட் அணியை வழிநடத்தினார். இதுவும் நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது.

1999: இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த இந்த அரைஇறுதி சுற்றில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை சந்தித்தது. சோயிப் அக்தர், வாசிம் அக்ரமின் சூறாவளி பந்து வீச்சை ஓரளவு சமாளித்து நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை சுலபமாக ‘சேசிங்’ செய்த பாகிஸ்தான் அணி 15 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி கண்டது. சயீத் அன்வர் 113 ரன்களும், வஜஹதுல்லா வாஸ்தி 84 ரன்களும் எடுத்தனர்.

2007: வெஸ்ட் இண்டீசில் நடந்த இந்த உலக கோப்பையில், கிங்ஸ்டன் மைதானத்தில் இலங்கையுடன், நியூசிலாந்து மோதியது. கேப்டன் ஜெயவர்த்தனேவின் (115 ரன்) சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 289 ரன்கள் குவிக்க, பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணி முரளிதரன் (4 விக்கெட்), ஜெயசூர்யா (2 விக்கெட்), தில்ஷன் (2 விக்கெட்) ஆகியோர் வீசிய சுழல் வலையில் சிக்கி (41.4 ஓவரில் 208 ரன்) மூழ்கிப்போனது.

2011:.மறுபடியும் நியூசிலாந்தின் கனவுக்கு இலங்கை ‘வேட்டு’ வைத்தது. கொழும்பு நகரில் நடந்த இந்த அரைஇறுதியில் முதலில் ஆடிய வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்த ஸ்கோரை இலங்கை அணி 13 பந்துகள் மிச்சம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்திருக்கும் தென்ஆப்பிரிக்க அணியின் நிலைமையும் இது தான். அந்த அணியும் முந்தைய மூன்று அரைஇறுதி தடையை கடந்ததில்லை. அதன் விவரம் வருமாறு:-

1992: முதல் முறையாக பங்கேற்ற இந்த உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்க அணி அரைஇறுதியில் இங்கிலாந்துடன் சிட்னி நகரில் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. அடுத்து தென்ஆப்பிரிக்க அணி வெற்றியை நோக்கி பயணித்த போது மழை குறுக்கிட்டு எமனாக வந்தது.

13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மழையால் 2 ஓவர் இழப்பு ஏற்பட்டு, சர்ச்சைக்குரிய விதியால் ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்றும் சிறிது நேரத்தில் ஒரு பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அடுத்தடுத்து இலக்கு மாற்றப்பட்டது. இதனால் நொந்து போன தென்ஆப்பிரிக்க வீரர்கள் அந்த ஒரு பந்திலும் ஒரு ரன் எடுத்து விட்டு 19 ரன்கள் வித்தியாசத்தில் (மொத்தம் 232-6) தோற்று பரிதாபமாக வெளியேறினார்கள்.

1999:

இந்த அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுடன் கோதாவில் இறங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 213 ரன்கள் எடுக்க, தென்ஆப்பிரிக்கா கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. அதாவது கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது தென்ஆப்பிரிக்க வீரர் குளுஸ்னர் முதல் 2 பந்துகளையும் பவுண்டரிக்கு ஓட விட்டார்.

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை நேராக அடித்து விட்டு ரன் எடுக்க ஓடிய போது, எதிர்முனையில் நின்ற டொனால்டு ‘பராக்’ பார்த்து கொண்டிருந்தார். பிறகு மிகவும் தாமதமாக ஓடியதால் டொனால்டு ரன்-அவுட் செய்யப்பட்டார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரும் 213 ரன்களில் நின்று சமன் (டை) ஆனது. பின்னர் சூப்பர்சிக்ஸ் சுற்றில் எடுக்கப்பட்ட ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

2007: இந்த உலக கோப்பையிலும் ஆஸ்திரேலியாவிடமே, தென்ஆப்பிரிக்கா சரண் அடைந்தது. முதலில் பேட் செய்த கிரேமி சுமித் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 43.5 ஓவர்களில் 149 ரன்களில் முடங்கியது. ஷான் டெய்ட் 4 விக்கெட்டுகளும், மெக்ராத் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 31.1 ஓவர்களிலேயே இலக்கை தொட்டு விட்டது.

இவ்விரு அணிகளும் செய்த அதிர்ஷ்டமோ என்னவோ முதல் முறையாக அரைஇறுதியில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதாவது ஏதாவது ஒரு அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கப்போவது உறுதியாகி விட்டது. உலக கோப்பையில் நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 4-ல் நியூசிலாந்தும், 2-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி