செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை… post thumbnail image
11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் (42 ஆட்டங்கள்) முடிந்து விட்டன. லீக் முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம் (ஏ பிரிவு), இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (பி பிரிவு) ஆகிய அணிகளும் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. நாளை (புதன்கிழமை) கால் இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களில் நிகழ்ந்த சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் வருமாறு:-

* இந்த உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் மட்டும் தோல்வியே சந்திக்காமல் கால் இறுதிக்குள் நுழைந்து இருக்கின்றன. ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் வெற்றியே காணாமல் வெளியேறி இருக்கின்றன.

* லீக் ஆட்டங்களில் மொத்தம் 35 சதங்கள் பதிவாகி உள்ளன. இது ஒரு உலக கோப்பையில் அடிக்கப்பட்ட அதிக சதமாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் 21 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. இலங்கை அணி அதிகபட்சமாக 8 சதங்கள் கண்டது. ஆப்கானிஸ்தான் சதம் எதுவும் அடிக்காத அணியாக வெளியேறியது.

* கான்பெர்ராவில் நடந்த ஜிம்பாப்வேக்கு (பிப்.24) எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 147 பந்துகளில் 10 பவுண்டரி, 16 சிக்சருடன் 215 ரன்கள் குவித்து அனைவரையும் வியக்க வைத்தார். இதுவே உலக கோப்பை போட்டியில் தனிநபரின் அதிகபட்சம் மட்டுமின்றி, உலக கோப்பை போட்டியில் பதிவு செய்யப்பட்ட முதல் இரட்டை சதமும் ஆகும். ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட 5-வது இரட்டை சதமாகும்.

* இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேனான சங்கக்கரா இதுவரை 4 சதங்கள் உள்பட 496 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருக்கிறார். இதன் மூலம் ஒரு உலக கோப்பை போட்டியில் மட்டுமின்றி, ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்து 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சங்கக்கரா படைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கக்கராவுக்கு அடுத்தபடியாக கால் இறுதி வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன் பிரன்டன் டெய்லர் 2 சதங்கள் உள்பட 433 ரன்கள் எடுத்துள்ளார்.

* ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி லீக் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக விளங்குகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி (இந்தியா), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), ஜோஷ்டேவி (ஸ்காட்லாந்து) ஆகியோர் உள்ளனர்.

* லீக் ஆட்டங்களில் மொத்தம் 1,854 முறை பவுண்டரிக்கும், 385 முறை சிக்சருக்கும் பந்துகள் பறந்து இருக்கின்றன. இலங்கை அணி அதிகபட்சமாக 172 பவுண்டரியும், வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகபட்சமாக 52 சிக்சர்களையும் அடித்து இருக்கின்றன. இலங்கை வீரர் சங்கக்கரா அதிக பவுண்டரிகள் (54) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் அதிக சிக்சர்கள் (20) அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலையிலும் இருக்கின்றனர்.

* இந்த உலக கோப்பையில் எல்லா அணிகளும் ரன்குவிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் வகையில் ரன் குவித்து வருகின்றன. இதுவரை 25 முறை 300 ரன்களுக்கு மேல் ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதில் 3 தடவை 400 ரன்களுக்கு மேல் குவித்ததும் அடங்கும்.

* பெர்த்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (மார்ச் 4) ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்தது. இது இந்த உலக கோப்பையில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் மட்டுமின்றி, உலக கோப்பை வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும் அமைந்தது. இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் இந்திய அணி, பெர்முடாவுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக (பிப்.28) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 102 ரன்னில் ஆட்டம் இழந்ததே இந்த போட்டி தொடரில் குறைந்தபட்ச ரன்னாகும்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (பிப்.14) இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் பின் 10 ஓவர்கள் பந்து வீசி 71 ரன்கள் விட்டுக்கொடுத்து ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த போட்டி தொடரில் நிகழ்ந்த ஒரே ‘ஹாட்ரிக்’ இது தான்.

* இந்த போட்டி தொடரில் இதுவரை 43 தடவை இணை ஆட்டத்துக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (பிப்.24) வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கெய்ல்-சாமுவேல்ஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்தனர். இது உலக கோப்பை போட்டியில் ஒரு இணை ஆட்டத்துக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் கங்குலி-டிராவிட் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* பெர்த்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது உலக கோப்பை போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் பெர்முடா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

* இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (பிப்.20) நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். இது உலக கோப்பை போட்டியில் குறைந்த பந்தில் அடிக்கப்பட்ட அரை சதமாகும். ஒருநாள் போட்டியில் குறைந்தபந்தில் கண்ட 3-வது அரை சதமாகும். டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 16 பந்துகளிலும், ஜெயசூர்யா (இலங்கை) 17 பந்துகளிலும் ஒருநாள் போட்டியில் அரை சதத்தை கடந்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

* ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா 2 வீரர்களை கேட்ச் செய்து ஆட்டம் இழக்க வைத்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டி வரலாற்றில் அதிக வீரர்களை ஆட்டம் இழக்க வைத்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சங்கக்கரா பெற்றார். அவர் 36 ஆட்டங்களில் 54 பேரை ஆட்டம் இழக்க செய்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 31 ஆட்டங்களில் 52 பேரை ஆட்டம் இழக்க செய்ததே சாதனையாக இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி