வருங்கால கேப்டனாக உருவாகி வரும் விராட்கோலி பொது இடத்தில் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் ரசிகர்களை மட்டுமின்றி முன்னாள் வீரர்களையும் முகம் சுழிக்க வைத்தது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியமும், அணி நிர்வாகமும் விராட்கோலி தகாத வார்த்தை எதுவும் பயன்படுத்தவில்லை.தவறான புரிந்து கொள்ளுதல் காரணமாக இந்த சம்பவம் நடந்து விட்டது என்று விராட்கோலிக்கு ஆதரவாகவே ஒத்து ஊதியது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத நிலையில் விராட்கோலியால் அவமதிக்கப்பட்ட அந்த நிருபர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியாவுக்கு புகார் கடிதம் எழுதினார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கவனத்துக்கும் கொண்டு சென்றதால் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது. அதோடு அங்குள்ள சட்டவிதிப்படி விராட்கோலி மீது வழக்கு தொடர வழிமுறை உள்ளதா? என்றும் அந்த நிருபர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம், விராட்கோலி தவறாக நடந்து கொண்டது தெரியவந்ததால் அவரை எச்சரிக்கை செய்துள்ளது.இது குறித்து இந்திய கிரிக்கெட் செயலாளர் அனுராக் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இரண்டு நாட்களுக்கு பிறகு பெர்த்தில் நடந்த சம்பவம் குறித்து வாரியத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சம்பந்தப்பட்ட வீரர் (விராட்கோலி) இந்திய அணியின் கண்ணியத்தையும், மாண்பையும் கட்டி காக்கும் வகையில் எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவம் வருங்காலத்தில் மீண்டும் நடக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் செய்திகளை சேகரிப்பதிலும், கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதிலும் மீடியாக்களின் பங்களிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் மதிக்கிறது.மீடியாக்களின் ஆதரவையும் வரவேற்கிறோம். சம்பந்தப்பட்ட அனைவரும் பிரச்சினையை மறந்து உலக கோப்பை போட்டி தொடரில் இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி