செய்திகள்,முதன்மை செய்திகள் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி…

விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி…

விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி… post thumbnail image
ஓசூர் :- கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக தினமும் கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு இண்டர்சிட்டி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.15 மணிக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 7.40 மணி அளவில் இண்டர்சிட்டி விரைவு ரெயில் ஓசூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் வந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பெங்களூரில் இருந்து வந்து கொண்டு இருந்த அந்த ரெயில் ஆனைக்கல் பகுதியினை கடக்கும் போது திடீரென்று டி–8, டி–9 உள்பட 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 2 பொது பெட்டிகளும், 2 ஏ.சி. பெட்டிகளும் அடங்கும். காலை நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். திடீரென ரெயில் பெட்டி கவிழ்ந்ததால் இந்த பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர்.

தடம் புரண்ட பெட்டிகளில் பயணம் செய்த 12 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 17 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பலியான 12 பேரின் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

சம்பவ இடத்துக்கு மத்திய மந்திரி சதானந்த கவுடா நேரில் வந்து பார்வையிட்டார். தமிழக மற்றும் கர்நாடக ரெயில்வே அதிகாரிகள் விரைந்து உள்ளனர். மேலும் இரு மாநிலங்களில் இருந்தும் 20–க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்தில் டி–9 பெட்டி தான் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளது. பயணிகள் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் மாட்டி கொண்டு உள்ளதால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை 12 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கவிழ்ந்த ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரெயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி கிடப்பதால் மீட்பு படையினர் வெல்டிங் எந்திரம் மூலம் பெட்டியை உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து பற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு மீட்பு பணியை தொடர்ந்தனர்.

ரெயில் தடம் புரண்டதற்கு பாறை உருண்டு விழுந்ததே காரணம் என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு கூறினார். என்றாலும் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் விசாரணை முடிந்த பிறகே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

பெங்களூரில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த விசாரணையை நடத்துவார் என்றும் மத்திய மந்திரி கூறினார். விபத்து நடந்த இடத்திற்கு அவர் விரைந்துள்ளார். இந்த விபத்துக்கு சதி செயல் காரணமா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயிலில் பயணித்த சில பயணிகள் கூறும் போது ‘டமார்’ என்ற சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். எனவே ரெயில் விபத்துக்கு சதி காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

விபத்து நடந்த இடத்துக்கு தென்மேற்கு ரெயில்வேக்கு உட்பட்ட அதிகாரிகள், பெங்களூர் ரெயில்வே கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து நவீன கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விபத்து நடந்த ரெயிலின் மற்ற பெட்டிகளில் பயணித்த பொதுமக்கள் அங்கிருந்து வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர்.

இந்த விபத்தின் காரணமாக பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் மாற்றுப் பாதையில் (அதாவது கிருஷ்ணராஜாபுரம், குப்பம், திருப்பத்தூர் வழியாக) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஓசூர் மற்றும் பெங்களூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் ஆனைக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ரெயிலில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் ஆனைக்கல் விரைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி