ரோஜர் பின்னி-ஸ்டூவர்ட் பின்னி
இந்த உலககோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் பெங்களூரை சேர்ந்த ஸ்டூவர்ட் பின்னி இடம் பெற்றுள்ளார். அவரது தந்தை ரோஜர் பின்னியும் உலககோப்பையில் ஆடியவர் ஆவார். இதன்மூலம் உலக கோப்பையில் ஆடும் முதல் தந்தை–மகன் என்ற பெருமையை பெறுகிறார்கள்.
ரோஜர் பின்னி 1983–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தார். அந்த உலக கோப்பையில் அவர் தான் அதிக விக்கெட் (18) கைப்பற்றினார். இதேபோல 1987–ம் ஆண்டு நடந்த உலக கோப்பையிலும் ரோஜர் பின்னி ஆடினார். அவர் 9 ஆட்டத்தில் 19 விக்கெட் சாய்த்தார். 29 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும். ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவட் பின்னி இந்த உலக கோப்பையில் அறிமுகம் ஆகிறார். ஆல்ரவுண்டரான அவர் 9 போட்டியில் விளையாடி இருக்கிறார்.
ராட் லாத்தம்-டாம் லாத்தம்
1992–ம் ஆண்டு சொந்த நாட்டில் நடந்த உலக கோப்பையில் ஆடியவர் ராட் லாத்தம் நியூசிலாந்தை சேர்ந்த அவர் 7 ஆட்டத்தில் விளையாடி 136 ரன் எடுத்தார். அவரது மகன் டாம் லாத்தம் இந்த உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்று உள்ளார்.
தந்தை உலக கோப்பையில் விளையாடும் நேரத்தில் தான் இவர் பிறந்தார். விக்கெட் கீப்பரான டாம் லாத்தம் 26 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.
லான்ஸ் கெய்ன்ஸ்- கிறிஸ் கெய்ன்ஸ்
நியூசிலாந்தை சேர்ந்த தந்தை– மகனான லான்ஸ் கெய்ன்ஸ்– கிறிஸ் கெய்ன்ஸ் உலக கோப்பையில் ஆடி உள்ளனர். லான்ஸ் கெய்ன்ஸ் 1975, 1979, 1983 ஆகிய 3 உலக கோப்பையில் 11 ஆட்டத்தில் விளையாடி உள்ளார். 14 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
அவரது மகன் கிறிஸ் கெய்ன்ஸ் ஆல்-ரவுண்டர் ஆவார். 1992, 1996, 1999, 2003 ஆகிய 4 உலக கோப்பையில் விளையாடி இருக்கிறார். 28 ஆட்டத்தில் விளையாடி 565 ரன் எடுத்துள்ளார். 18 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
ஜெப் மார்ஷ்- மிக்சேல் மார்ஷ்
ஆஸ்திரேலிய அணியில் இந்த உலக கோப்பையில் தந்தை– மகன் சாதனை நடக்கிறது. 23 வயதான ஆல்ரவுண்டர் மிச்சேல் மார்ஷ் இந்த உலககோப்பையில் அறிமுகம் ஆகிறார். 14 ஒருநாள் போட்டியில் அவர் விளையாடி இருக்கிறார். மிச்சேல் மார்ஷின் தந்தை ஜெப் மார்ஷ் பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஆவார்.
1987, 1992 ஆகிய உலக கோப்பையில் விளையாடி இருக்கிறார். இதில் 1987–ல் ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. அவர் உலக கோப்பையில் 13 ஆட்டத்தில் விளையாடி 579 ரன் எடுத்து இருந்தார். இரண்டு சதமும், இரண்டு அரை சதமும் இதில் அடங்கும். சராசரி 48.25 ஆகும்.
கிறிஸ் பிராட்- ஸ்டூவர்ட் பிராட்
இங்கிலாந்து ஒருநாள் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர்களில் 3–வது இடத்தில் உள்ளார். அவர் 173 விக்கெட் (113 ஆட்டம்) எடுத்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் விளையாடும் 3–வது உலககோப்பை இதுவாகும். இதற்கு முன்பு 2007, 2011 உலககோப்பையில் விளையாடி இருக்கிறார். ஆனால் மொத்தமே 4 ஆட்டத்தில் தான் ஆடி உள்ளார். 6 விக்கெட் எடுத்துள்ளார்.
இவரது தந்தை கிறிஸ் பிராட் 1987 உலக கோப்பையயில் ஆடி இருக்கிறார். 3 ஆட்டத்தில் விளையாடி 67 ரன்களே எடுத்து இருந்தார்.
டான் பிரிங்கிள்- டெரிங் பிரிங்கிள்
1975–ம் ஆண்டு நடந்த முதல் உலக கோப்பையில் விளையாடியவர் டான் பிரிங்கிள் இங்கிலாந்தை சேர்ந்த அவர் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி இருந்தார். 2 ஆட்டத்தில் மட்டுமே ஆடினார். அவரது மகன் டெரிங் பிரிங்கிள் 1987, 1992 ஆகிய உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக ஆடியவர். அவர் 11 ஆட்டத்தில் 15 விக்கெட் கைப்பற்றினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி