கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது 25-வது வயதில், மார்வாடி பெண்ணான பாப்ரி கோசை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரனின் அம்மா முழு சம்மதம் தெரிவிக்க அவளை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அதன்படி, இவர்களது திருமணத்தை சர்ச்சில் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. காதலியின் வரவுக்காக அங்கு காத்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், நீண்ட நேரமாகியும் அவள் வராததால் அவளைத் தேடி வீட்டுக்கு செல்கிறார். அங்கு நாயகியின் வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது. இவர்களது காதல் விவரம் நாயகியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவளை கண்டித்து, ஊரை காலி செய்து போனதும் தெரிய வருகிறது. காதலி எங்கு போனாள் என்று தெரியாமல் பரிதவிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவளை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருகிறார்.
கிட்டத்தட்ட 50 வருடங்களாக தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. தனது வாழ்நாளின் கடைசி தருவாயில் இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு, அவருடைய நண்பன் மூலமாக தனது காதலி சிம்லாவில் இருப்பதாக தெரிய வருகிறது. உடல்நிலையை பற்றி கவலைப்படாமல், காதலியைத் தேடி சிம்லாவுக்கு புறப்படுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். தனது காதலிக்காக வாங்கிய மோதிரத்தை அவளிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் தனது உயிர் பிரிய வேண்டும் என்ற முடிவில் அவளை தேடி அலைகிறார். இறுதியில், தனது காதலியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே முதல் பாதி கதை.
தமிழ் சினிமாவில் இயக்குனராக பளிச்சிட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், முதல்முறையாக அரிதாரம் பூசி, கதாநாயகன் வேடமேற்றிருக்கிறார். 75 வயதுடையவராக, முகத்தில் தாடியுடன் வரும் இவருடைய தோற்றம் காதல் தோல்வியை மனதில் அழகாக பதிய வைக்கிறது. இயக்குனராக இந்த கதையில் இவருடைய அக்கறை ரொம்பவுமே பளிச்சிடுகிறது. எல்லா கதாபாத்திரங்களையும் நன்றாக வேலை வாங்கி நடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, நாயகியாக நடித்துள்ள பாப்ரி கோஸ் புதுமுகம் என்றாலும், அது தெரியாத அளவுக்கு அற்புதமான நடிப்பை வரவழைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு. இப்போது இரண்டாம் பாதி கதைக்கு செல்வோம்…
இரண்டாம் பாதியில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜெயபாலன் மற்றும் அவரது மகன் ரோபோ சங்கர் இருவரும் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தல் வேலைகளை செய்து வருகிறார்கள். இதை தட்டிக் கேட்கும் தாசில்தாரை மண்ணில் புதைத்து கொன்றுவிடுகிறார்கள். இதை விசாரிக்க தனியார் தொலைக்காட்சியில் இருந்து அஸ்வினும், காயத்ரியும் அந்த ஊரில் வந்து தங்குகிறார்கள். இந்நிலையில், அதே ஊரில் வசிக்கும் நாயகி சுனுலட்சுமி, தாய்-தந்தையை இழந்த நிலையில் தனது தங்கையை மிகவும் அக்கறையுடன் வளர்த்து வருகிறாள். ஒருநாள் தான் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ரகளை செய்யும் ரோபோ சங்கரை, சுனுலட்சுமியின் தங்கை தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறாள். இதனால், அவளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விடுகிறார் ரோபோ சங்கர். மேலும், அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று ஊரையே நம்ப வைக்கிறார். ஆனால், தனது தங்கை தற்கொலை செய்துகொள்ளவில்லை. ரோபோ சங்கர் தான் அவளை கொலை செய்திருக்கிறான் என்று சுனுலட்சுமிக்கு தெரிய வருகிறது. அவனை எப்படியாவது பழிவாங்க முயற்சி செய்கிறாள். இறுதியில், தனது தங்கை சாவுக்கு காரணமான ரோபோ சங்கரை, சுனுலட்சுமி பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே இரண்டாம் பாதி கதை.
இரண்டாம் பாதியில் நடித்துள்ள நட்சத்திரங்கள் எல்லோரும் படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதையை தூக்கி நிறுத்துகிறார்கள். இரண்டாம் பாதியின் நாயகியான சுனுலட்சுமி, ஒரு கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருடைய அழுத்தமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.அதேபோல், இதுவரை காமெடியனாகவே நாம் பார்த்து ரசித்து வந்த ரோபோ சங்கர், இந்த படத்தில் முழு வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். முகத்தோற்றத்திலேயே நம்மை சிரிக்க வைக்கும் ரோபோ சங்கர், இந்த படத்தில் அப்படியே எதிர்விதமான தோற்றத்தில் நடித்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. ஆடுகளம் ஜெயபாலனும் தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.இரண்டாம் பாதி கதையிலும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனே மேலோங்கியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இவர் கடினமாக வேலை வாங்கி அவர்களிடமிருந்து அழகான நடிப்பை வரவழைத்து கதைக்கு வலுசேர்த்திருக்கிறார்.
ஒரு தலைப்பில் இரண்டு கதைகளை வைத்து, ரசிகர்களுக்கு படம் பார்க்கும் புதிய வழியை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.ஆனால், இரண்டாவது கதையில் சிறுமியை கொலை செய்வதை, பாலியல் பலாத்காரம் செய்து கொல்வது போல் படமாக்கியிருப்பதை தவிர்த்திருக்கலாம். இது மாதிரியான காட்சிகள் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிடுமோ? என்ற பயம் ஏற்படுகிறது நமக்கு. இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. பின்னணி இசையிலும் இளையராஜா பளிச்சிடுகிறார். அருண் பிரசாத் ஒளிப்பதிவில் சிம்லாவின் அழகு கண்ணை பறிக்கிறது.
மொத்தத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ புதுமை………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி