தற்போது அந்நாட்டு தேசிய கலைப் பொருளகத்தில் உள்ள இச்சிலை இந்தியாவிலிருந்து திருடப்பட்டதாகும். நீண்ட காலமாக சர்ச்சைக்கு காரணமாக விளங்கும், புத்தர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும், 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த சிலை இந்திய தொல்லியல் துறை ஆய்விடத்திலிருந்து திருடப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியா தெரிவித்தது.
சமீபத்தில் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில், புத்தர் சிலை பற்றி இந்திய அதிகாரிகள் சர்ச்சையை எழுப்பிய பின்னர் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் ராஸ் பேக்கர் என்ற கோடீஸ்வரர் தேசிய கலைப் பொருள் காப்பகத்திற்கு அதை கொடையாக கொடுத்ததும், அவர் நியூயார்க்கில் உள்ள வியாபாரியிடம் அதை வாங்கியதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது.
கடத்தலுக்கு பெயர் போன அந்த வியாபாரி, இந்தியாவில் சிலை கடத்தும் கும்பலிடம் அந்த சிலையை வாங்கி ராஸ் பேக்கரிடம் ஏமாற்றி விற்றதும் தெரியவந்ததாக ஆஸ்திரேலியா மேலும் தெரிவித்துள்ளது.
இந்திய தொல்லியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுத் துறையும் டெல்லி தேசிய அருங்கட்சியகமும் இணைந்து செயல்பட்டதே இந்த சிலை திரும்ப கிடைக்க முக்கிய காரணமாக இருந்ததாகவும், குஷன் மன்னர் காலத்தை சேர்ந்த இந்த அரிய சிலை செம்மணற்கல்லால் செய்யப்பட்டதென்றும் உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் இச்சிலை செதுக்கப்பட்டதென்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட கலை பொக்கிஷங்களைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் இருநாட்டு நல்லுறவை ஆஸ்திரேலிய பிரதமர் அப்பாட் மேம்படுத்தி வருகிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இந்தியா வந்த அப்பாட் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி