இதில் ஜெயலலிதா உள்பட குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
இதை தொடர்ந்து ஜெயலலிதா உள்பட நால்வரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அங்கு அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதா உள்பட நால்வருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது வழக்கு விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது என்றும், டிசம்பர் 18–ந் தேதிக்குள் மேல்முறையீட்டு மனு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த டிசம்பர் 18–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் அப்பீல் வழக்கை விசாரிக்க தனி நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை தினமும் நடத்தி 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நேற்று இவ்வழக்கை நீதிபதி குமாரசாமி விசாரிப்பார் என கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அவர் டெல்லியிலிருந்து பெங்களூர் வந்து சேராததால் இன்று மட்டும் இவ்வழக்கை நீதிபதி பில்லப்பா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது வரும் ஜனவரி 5-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி பில்லப்பா உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி