செய்திகள்,விளையாட்டு 3–வது டெஸ்ட்: இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 108/1!…

3–வது டெஸ்ட்: இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 108/1!…

3–வது டெஸ்ட்: இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 108/1!… post thumbnail image
மெல்போர்ன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் 72 ரன்னும், விக்கெட் கீப்பர் ஹாடின் 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடியது. இந்த தொடரில் மோசமாக ஆடி வந்த ஹாடின் இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடி தனது 18–வது அரை சதத்தை பதிவு செய்தார். 97–வது ஓவரில் ஆஸ்திரேலியா 300 ரன்னை தொட்டது.

மறுமுனையில் இருந்த கேப்டன் சுமித் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 191 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார். அவர் தொடர்ந்து 3–வது சதத்தை அடித்து முத்திரை பதித்தார்.ஹாடின் 55 ரன்னில் முகமது ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 326 ஆக இருந்தது. 6–வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 110 ரன் எடுத்தது. அடுத்து வந்த மிச்சேல் ஜான்சனும் தனது பங்குக்கு 28 ரன் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.8–வது விக்கெட்டான சுமித்–ஹாரிஸ் ஜோடி தொடர்ந்து ரன்களை குவித்தது. கடந்த டெஸ்டை போலவே கடைசி நேர விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். 121–வது ஓவரில் ஆஸ்திரேலியா 400 ரன்னை குவித்தது.வேகப்பந்து வீரரான ஹாரிஸ் 75 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். இது அவருக்கு 3–வது அரை சதம் ஆகும். இதேபோல சுமித் அதிரடியாக விளையாடி 150 ரன்னை குவித்தார். 273 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். இந்த ஜோடியை பிரிக்க இயலாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள்.
அஸ்வின் ஒரு வழியாக இந்த ஜோடியை பிரித்தார். ஹாரிஸ் 74 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 482 ஆக இருந்தது. 8–வது விக்கெட் ஜோடி 106 ரன் எடுத்தது.

அடுத்து வந்த லயன் 11 ரன்னில் வெளியேறினார். அதிரடியான ஆட்டத்தால் சுமித் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் 192 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். 305 பந்துகளில் (15 பவுண்டரி, 2 சிக்சர்) அவர் இந்த ரன்னை எடுத்தார். அவரது அவுட்டோடு ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடிந்தது. ஆஸ்திரேலியா 142.3 ஓவரில் 530 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது ஷமி 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. ஷிகார் தவானும், முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக ஆடினார்கள். தொடக்க ஜோடி நிதானத்துடன் ஆடியது. ஆனால் தவான் நிலைத்து நிற்கவில்லை. 28 ரன்னில் ஹாரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 55 ஆக இருந்தது. 2–வது விக்கெட்டுக்கு முரளிவிஜய்யுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். விஜய் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 35–வது ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட்டது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து இருந்தது. முரளிவிஜய் 55 ரன்னுடனும், புஜாரா 25 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி