இதில் ஒரு விஞ்ஞானியான நாயகன் பார்த்தி, இதெல்லாம் தவறு என்று கூறுகிறார். நாட்டில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய வேண்டும் என்றும், குறைந்த தண்ணீரில் நல்ல விளைச்சல் தரக்கூடிய விதை நெல்லை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார். இது சாத்தியம் இல்லை என்று எதிர்ப்பு தெரிவிக்கும் விஞ்ஞானிகளுடன் சவால் விட்டு, என் விஞ்ஞானத்தால் அதை உருவாக்குவேன் என்று கூறிவிட்டு வருகிறார்.
மறுபக்கம் கிராமத்தில் டீச்சராக பணிபுரிந்து வரும் மீரா ஜாஸ்மின் விவசாயம் மீது அதிக நாட்டம் உடையவராகவும், விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வருகிறார். ஒரு நாள் மீரா ஜாஸ்மின் கனவில் 3000 வருடத்திற்கு முன் குறைந்த தண்ணீரில் அதிகமாக விளையக்கூடிய தாகம் தீர்த்தா நெல்லை தொல்காப்பியர் கண்டுபிடித்த காட்சி தோன்றுகிறது. வருங்கால சந்ததிகளுக்கு உதவவும், விவசாயம் அழியாமல் பாதுகாக்கவும் அந்த நெல்லை பூமிக்கடியில் புதைத்து வைத்தது கனவில் தெரிகிறது. அது தன் குல தெய்வ கோவில் அருகே இருப்பதாகவும் மீரா ஜாஸ்மினுக்கு தெரியவருகிறது.
கனவில் வந்தது போல் அந்த நெல்லை தன் தந்தை தலைவாசல் விஜய்யின் உதவியோடு கண்டுபிடிக்கிறார் மீரா ஜாஸ்மின். ஆனால் அவை எல்லாம் 3000 வருடத்திற்கு முன் புதைத்ததால் அழிந்து கிடக்கிறது. இந்த நெல்களுக்கு எல்லாம் உயிர் கொடுக்க முடியும் என்றும் அதை விஞ்ஞானியால் தான் முடியும் என்று முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில் தலைவாசல் விஜய்யின் நண்பர் மீரா ஜாஸ்மின் வீட்டிற்கு வருகிறார். அவருடைய மகனான பார்த்தி விஞ்ஞானி என்றும், அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் தெரிவிக்கிறார். இதனால் மீரா ஜாஸ்மின் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, விஞ்ஞானியான பார்த்தியை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெற்றோரிடம் கூறுகிறார். விஞ்ஞானம் தான் உலகம் என்று வாழ்ந்து வரும் பார்த்தியை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க மீரா ஜாஸ்மின் மற்றும் குடும்பத்தினர் பார்த்தி வீட்டிற்கு செல்கின்றனர்.
அங்கு வீட்டு வேலை செய்து வரும் விவேக் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் உதவியுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். இருவரின் திருமணம் நடைபெற்றதா?, தாகம் தீர்த்தா நெல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பார்த்தி நிஜ விஞ்ஞானி. விஞ்ஞானியாக பணியாற்றி வரும் இவருக்கு சினிமா மேல் உள்ள ஆசையாலும் நிஜத்தில் விஞ்ஞானியான இவர் சினிமாவிலும் விஞ்ஞானத்தை வளர்க்கவும் நல்ல கமர்ஷியல் படத்தை எடுத்திருக்கிறார். விஞ்ஞானி என்று பெயர் வைத்து தன் கதாபாத்திரம் மட்டுமல்லாமல் மற்ற கதாபாத்திரங்களும் பேசும் அளவிற்கு படம் எடுத்த பார்த்தியை பாராட்டலாம். முதல் படத்திலேயே சமூக அக்கறையோடு நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை புகுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மீரா ஜாஸ்மின், நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் பளிச்சிடுகிறார். நடனம், நடிப்பு என சிறப்பாக நடித்திருக்கிறார். விவேக்கின் காமெடி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகிறார். மேலும் தலைவாசல் விஜய், தேவதர்ஷனி உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்கள்.
மாரீஸ் விஜய்யின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக உள்ளது. அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘விஞ்ஞானி’ விவசாயத்திற்கான விலாசம்…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி