இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்களது ஒட்டுமொத்த வருவாயில் 90 சதவீதம் குறைந்து விடும் என்றும், எனவே புதிய ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் என்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அறிவித்தனர். ஒப்பந்த பிரச்சினையில் சுமுக தீர்வு காணப்படும் வரை பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்றும், வாவெல் ன்ட்சை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் செவி சாய்க்கவில்லை. வீரர்களிடம் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். எங்களால் அங்கீகரிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களின் சங்க பிரதிநிதி மூலம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம்.அதுவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படியே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று வெய்ன் பிராவோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்த விஷயத்தில் தங்களது பிடியை தளர்த்திக் கொள்ளாத நிலையில், வீரர்களும் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்திய தொடரில் மேற்கொண்டு விளையாடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். முன்னதாக தர்மசாலாவில் நேற்று நடந்த 4-வது ஒரு நாள் போட்டியையும் புறக்கணிக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திட்டமிட்டனர்.
இதனை அறிந்த இந்திய கிரிக்கெட் வாரிய இணைச் செயலாளர் அனுராக் தாகூர் உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துரைத்தார்.இதனால் கடைசி நேரத்தில் மனம்மாறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடுவது என்று முடிவு செய்து விளையாடினார்கள். இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:-வீரர்களுடனான ஒப்பந்த பிரச்சினை காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தில் எஞ்சிய போட்டிகளை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும், எனவே வீரர்களை உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்பும்படியும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு இன்று (நேற்று) காலை தகவல் அனுப்பியது.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால் நாங்கள் அதிர்ச்சியும், மிகுந்த ஏமாற்றமும் அடைந்துள்ளோம். தங்கள் வீரர்களின் உள்விவகாரத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உரிய தீர்வு காண தவறி, பிரச்சினையை நடப்பு தொடரிலும் நீடிக்க அனுமதித்து பாதிப்பை உருவாக்கியது சம்பந்தப்பட்ட இரு தரப்புக்குமே அழகல்ல.
இது அவர்கள் மீது நல்ல அபிப்ராயத்தையும் தராது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே நீண்ட பாரம்பரிய உறவு உண்டு. தற்போதைய விலகல் முடிவு, எதிர்கால கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியம், வீரர்கள் இடையிலான உறவில் கேள்வியை எழுப்புகிறது.திட்டமிட்டபடி தொடரை முழுமையாக விளையாடி முடிக்கும்படி நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தை பலமுறை கேட்டுக் கொண்டோம். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும், வீரர்களும் ஒருதலைபட்சமான முடிவை எடுத்து விட்டார்கள். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்.
அப்படி இருந்தும் அவர்கள் தொடரை பாதியிலேயே முடித்து கொண்ட விஷயத்தை நாங்கள் சாதாரணமாக விட்டு விடமாட்டோம். உரிய நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிடுவோம். இழப்பீடு கோரி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் மீது வழக்கு தொடருவோம்.சட்ட நடவடிக்கைக்காக எங்களது சட்டநிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்டுள்ளோம்.இவ்வாறு சஞ்சய் பட்டேல் கூறினார்.
எஞ்சிய கடைசி ஒரு நாள் போட்டி, மூன்று நாள் பயிற்சி ஆட்டம், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று டெஸ்டுகளில் விளையாடாமல் அந்த அணி வீரர்கள் இன்று சொந்த நாட்டுக்கு புறப்படுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி