செய்திகள்,விளையாட்டு 45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!…

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!…

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!… post thumbnail image
இன்சியோன்:-அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டு. இப்போட்டி முதல்முறையாக 1951–ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி 17–வது ஆசிய விளையாட்டு திருவிழா தென்கொரியாவின் இன்சியோன் நகரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 4ம் தேதி வரை அரங்கேறுகிறது. இதில் சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து 9,429 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான பந்தயங்களில் 439 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்திய தரப்பில் 516 பேர் கொண்ட குழுவினர் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 163 பயிற்சியாளர் மற்றும் அதிகாரிகளும் வீரர்களுடன் சென்றுள்ளனர். குவாங்சூவில் 2010–ம் ஆண்டு நடந்த முந்தைய ஆசிய போட்டியில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்களை கைப்பற்றியது. அப்போது இந்தியா தரப்பில் 626 பேர் கலந்து கொண்டனர்.ஆனால் இந்த தடவை எண்ணிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெகுவாக குறைத்துக் கொண்டு விட்டது. நீச்சல், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் (ஒரு வகை படகு போட்டி), சைக்கிளிங், குதியேற்றம், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட் பால், ஆக்கி, ஜூடோ, கபடி, துடுப்பு படகு, செபக்தாக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், தேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து, மல்யுத்தம், வுசூ, பளுதூக்குதல், பாய்மர படகு ஆகிய 28 விளையாட்டுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது.

ஆசிய விளையாட்டின் கோலாகலமான தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ‘450 கோடி மக்களின் கனவு ஒரே ஆசியா’ என்ற கருத்தை மையமாக கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. ‘ஆசியாட்’ என்ற பாடலை தென்கொரிய பாடகி ஜோ சுமி பாடுகிறார். அதன் பிறகு கொரியாவின் வரலாற்றையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளும், வண்ணமயமான வாணவேடிக்கையும் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் ஒவ்வொரு அணிகளும் அணிவகுத்து செல்வது வழக்கம். இந்திய அணி ஆக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து செல்ல இருக்கிறது.தொடக்க விழா நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் அனைத்தையும் டென் ஸ்போர்ட்ஸ், டென் ஆக்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி