இதேபோல் சுத்தமான இந்தியாவை உருவாக்குவதும் அவருடைய லட்சிய கனவாக இருந்து வருகிறது. இந்தியா சுத்தமான நாடாக இருந்தால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடுகளின் வரிசையில் முதல் 50 இடங்களைப் பிடித்துவிட முடியும் என்றும் இதனால் இந்தியாவை எடுத்துக்காட்டாக கூறும் நாடாகவும் மாற்ற இயலும் எனவும் கருதுகிறார்.குறிப்பாக சுத்தம், சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் வளர்ச்சி பெறச் செய்ய முடியும் என்பதும் அவருடைய சிந்தனையாக உள்ளது.இதற்காக ‘சுத்தமான இந்தியா’ என்னும் இயக்கத்தை தொடங்க அவர் முடிவு செய்துள்ளார்.இந்த மாபெரும் இயக்கத்தை வருகிற அக்டோபர் மாதம் 2–ந்தேதி, அதாவது மகாத்மா காந்தி பிறந்த நாளில் பிரதமர் மோடி நாடு முழுவதிலும் தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து, நேற்று முன்தினம் உயர் மட்ட அளவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி இந்த கூட்டம் பயனுள்ள வகையில் இருந்ததாக தெரிவித்தார்.அப்போது திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவு நீர் மேலாண்மை ஆகிய பணிகளை இந்தியா முழுவதிலும் உள்ள 500 பெரு மற்றும் சிறு நகரங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் சுத்தமான இந்தியா குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–மக்களின் பங்களிப்பின் வழியாக சுத்தமான இந்தியாவை உருவாக்குவதன் மூலம் மகாத்மா காந்தியின் கனவை நம்மால் நனவாக்க இயலும். நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.இதனை வெற்றிகரமான முறையில் உருவாக்குவதற்கான கருத்துகளை நீங்கள்(பொதுமக்கள்) பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த யோசனைகள் சுத்தமான இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும். உங்களது கருத்துகளை “mygov.nic.in/group_info/swachhbharatcleanindia” என்னும் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி