தினமும் ரஞ்சனியை காலேஜூக்கு அழைத்துச் செல்லும் பாஸ்கர், ஒருகட்டத்தில் அவள்மீது காதல் கொள்கிறான். அந்த காதலை அவளிடம் சொல்லவும் செய்கிறான். அவளும் அதை ஏற்றுக்கொண்டு இருவரும் காதல் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.மறுமுனையில், ரஞ்சனியின் தாய்மாமனான ராசுக்குட்டி ஒருதலையாக ரஞ்சனியை காதலித்து வருகிறார். கட்டினால் அவளைத்தான் கட்டிக்கொள்வேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார்.இந்நிலையில், பாஸ்கர்-ரஞ்சனியின் காதல் இருவருடைய பெற்றோருக்கும் தெரியவருகிறது. இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்கு செல்கிறார்கள்.அங்கு சென்றதும் பாஸ்கர், ரஞ்சனியிடம் ஒரு முத்தம் கேட்கிறார். முத்தத்திற்கு அவளும் ஒத்துக்கொள்கிறாள். அந்த ஒரு முத்தத்தால் அவளுடன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை நாயகனுக்கு வந்துவிடுகிறது. எனவே தற்கொலை முடிவை ஒதுக்கி வைத்துவிட்டு வீடு திரும்புகிறார்கள்.
ஒருவரையொருவர் மறந்துவிட்டதாக அவர்கள் பெற்றோர்களிடம் பொய் கூறிவிட்டு, தனிமையில் சந்தித்து வருகிறார்கள். இதை நோட்டமிடும் ராசுக்குட்டி அவர்களது காதலை பிரிக்க நினைக்கிறார்.இந்நிலையில், தனிமையில் நெருக்கமாக இருக்க நினைக்கும் பாஸ்கரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்து, ரஞ்சனியும்-பாஸ்கரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு நாவல்பழ காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குமார் மற்றும் அவரது நண்பர்களின் கண்களில் இந்த காதல் ஜோடி சிக்குகிறது.அவர்கள் பாஸ்கரை அடித்துப் போட்டுவிட்டு அவன் கண்முன்னாலேயே குமார் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் ரஞ்சனியை பலாத்காரம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். பின்னர் இருவரும் வீடு திரும்புகின்றனர். தோட்டத்தில் நடந்தது எதையுமே வீட்டுக்கு தெரியாமல் மறைக்கின்றனர்.
தன் கண் முன்னாலேயே தன்னுடைய காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ஒரு ஆண் மகனாக தன்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என மிகுந்த வேதனை கொள்கிறான் பாஸ்கர். ரஞ்சனியை பார்க்கவோ, அவளுடன் பேசவோ கூச்சப்படுகிறான். மறுபக்கம் தனது காதலியை கெடுத்தவர்களை பழிவாங்கவும் துடிக்கிறான்.
மறுமுனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது ரஞ்சனிக்கு அடிக்கடி நினைவில் வருவதால் ஓட்டப்பந்தயத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது.இறுதியில் ரஞ்சனி இதையெல்லாம் மீறி தனது லட்சியத்தில் வெற்றிபெற்றாரா? தனது காதலியை கெடுத்தவர்களை பாஸ்கர் பழிவாங்கினானா? என்பதே மீதிக்கதை.பாஸ்கராக வரும் நாயகன் ஹரிஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல் காட்சிகளில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், இவருக்கென்று படத்தில் சண்டைக்காட்சிகள் வைக்காதது குறையே.ரஞ்சனியாக வரும் நேகா, தோற்றத்தில் அச்சு, அசல் சினேகாவை நினைவுபடுத்துகிறார். சினேகாவை அடிக்கடி திரையில் பார்க்கமுடியவில்லையே என வருத்தப்படுகிறவர்கள் இவரை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் இவருடைய நடிப்பு அபாரம். காதல் காட்சிகளிலும் உருக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். பழிவாங்கும் வீரப்பெண்மணியாக உருவெடுக்கையில் கைதட்டல் பெறுகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் தலைகாட்டியிருக்கும் பாய்ஸ் மணிகண்டன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நாயகியின் தாய்மாமனாக வரும் அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு பதில் வெறுப்பையே தருகிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம்கூட குறைத்திருக்கலாம்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தன்னம்பிக்கை இருந்தால் தற்கொலை செய்துகொள்ள மாட்டாள். லட்சியத்தில் ஜெயிக்க தனது உயிரைக் கொடுத்தேனும் போராடுவாள் என்ற மையக்கருத்தை வலியுறுத்தி எடுத்திருக்கும் இயக்குனர் சுகந்தனுக்கு பாராட்டுக்கள்.ஆனால், படத்தில் ஆரம்ப காட்சிகளை நகர்த்த ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். தேவையில்லாத காட்சிகளை புகுத்தி கொஞ்சம் போரடித்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி கொண்டு சென்றிருக்கிறார். முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் அருமை.பைசல் இசையில் கானா பாலா பாடிய ‘ஓ ஜங்கிலி’, ‘மானப்போல ஓடுறவ’ ஆகிய பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ‘பத்திக்கிச்சே’ பாடல் நமக்குள்ளும் காதல் தீயை பற்றவைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. ரித்திஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘காதல் 2014’ போராட்டம்………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி