அப்போது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். பலர் தப்பி ஓடிவிட்டனர். பெண்களும், குழந்தைகளும் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் 15 பேர் கருகி பலியானார்கள். 25–க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.தகவல் கிடைத்ததும் கெயில் நிறுவன ஊழியர்கள் விரைந்து சென்று அந்த கிராமம் வழியாக செல்லும் கியாஸ் இணைப்பை துண்டித்து விட்டனர். அருகில் உள்ள நகரங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகே மீட்பு குழுவினர் கிராமத்துக்குள் செல்ல முடிந்தது. தீயின் வெப்பம் பல நூறு அடி தூரத்துக்கு இருந்தது. கிராமம் முழுவதும் வெப்ப மண்டலமாக இருந்தது. வீடுகளும் தீப்பிடித்து எரிந்து நாசமாகி கிடந்தது.மீட்பு படையினர் கவச உடை அணிந்து கிராமத்துக்குள் சென்று பலியானவர்களது உடல்களை மீட்டனர். உடல்கள் உருத்தெரியாத அளவுக்கு கருகி கிடந்தது. காயம் அடைந்த 25 பேரில் 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 10 பேரை காணவில்லை. எனவே சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. கியாஸ் குழாயில் பிடித்த தீ காரணமாக அந்த கிராமமே நாசமாகி விட்டது. காயம் அடைந்தவர்களுக்கு காக்கி நாடா, அமலாபுரம் ஆஸ்பத்திரிகளில் மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த கிராமத்தையொட்டி 10 ஏக்கரில் இருந்த ஏராளமான தென்னை மரங்களும் எரிந்து நாசமானது. தீப்பிடித்த போது அது பனை மர உயரத்துக்கு பற்றி எரிந்ததாக அருகில் வசிக்கும் கிராமத்தினர் தெரிவித்தனர். தீ கட்டுப்படுத்தப்பட்டாலும் அந்த கிராமமே நெருப்பு மண்டலம் போல் அனலாக கொதிக்கிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து கிராம மக்களும், கெயில் பைப் லைன் செல்லும் மற்ற கிராம மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த கோர விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் டெல்லியில் இருக்கும் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தனது அதிர்ச்சியை வெளியிட்டார். துணை முதல்–மந்திரி சின்ன ராஜப்பாவை தீப்பிடித்த நாகாராம் கிராமத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களையும் பார்த்தார். தீயில் உயிர் இழந்தவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.உடனடியாக அவர் பெட்ரோலியத்துறை மந்திரி, மந்திரி சபை செயலாளர், கெயில் சேர்மன் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கெயில் நிறுவன தலைவர் பி.சி. திரிபாதி பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு சென்று பார்வையிட்டார். அவர் கூறுகையில், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார். கெயில் எரிவாயு குழாயால் தங்களது கிராமமே நாசமானதால் மக்கள் ஆவேசம் அடைந்து கெயில் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தீ விபத்துக்கு கெயில் நிறுவன ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறியதாவது:–சில நாட்களுக்கு முன்பு இங்கு குழாய்கள் துருப்பிடித்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. ஊழியர்கள் வந்து புதிய குழாய் பதிக்காமல் ஏற்கனவே இருந்த குழாயை சரி செய்து சென்று விட்டனர். அதன் பிறகு நேற்று இரவு மீண்டும் கியாஸ் கசிவு ஏற்பட்டது. அருகில் உள்ள ஒ.என்.ஜி.சி. ஆலையில் இருந்துதான் கியாஸ் வாசனை வருவதாக நினைத்து விட்டோம். அதிகாலையில் டீக்கடைக்காரர் அடுப்பு பற்ற வைத்தபோது கியாஸ் குழாயில் தீப்பிடித்ததுடன் ஊர் முழுவதும் பரவி இருந்த கியாஸ் தீப்பிடித்து எரிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே கெயில் பைப் லைன் தீ விபத்து பற்றி விசாரணை நடத்த முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். அவர் சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு ஆந்திரா திரும்புகிறார். அவருடன் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, தர்மேந்திர பிரதான் ஆகியோரும் ஆந்திரா விரைகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி