சென்னை:-
ஏற்கனவே கூட்டுறவு துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதிதாக தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 13–ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.
முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் ரூ.1 கோடி செலவில் 10 அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கு 10 சதவீத விலை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (வியாழக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் இந்த அம்மா மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கூட்டுறவு கடையில் அம்மா மருந்தகம் திறக்கப்படுகிறது.
இங்கு அத்தியாவசியமான அனைத்து வகை மருந்துகள், டானிக்குகள், மாத்திரைகள் கிடைக்கும்.
இதுதவிர ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் 33 வேளாண் பொருள் சேமிப்பு கிடங்குகள், ரூ.1.05 கோடி செலவில் கட்டப்பட்ட 19 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பாதுகாப்பு அறைகள், ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் திண்டுக்கல் மற்றும் நெல்லையில் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக கட்டிடங்கள். ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பழனியில் விதை விற்பனை நிலையம்.
ரூ.24 லட்சம் செலவில் கடலூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலக கட்டிடம்; ரூ.2.52 கோடி செலவில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 4 கிளை கட்டிடங்கள் ரூ.30 லட்சம் செலவில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 3 கிளை கட்டிடங்கள் ரூ.15 லட்சம் மதிப்பில் சிதம்பரம் நகர கூட்டுறவு வங்கியின் தலைமையக கட்டிடம். ரூ.2.23 கோடி மதிப்பில் 48 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்கள் பொது காப்பு அறைகள் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடங்கள்.
ரூ.85.31 லட்சம் செலவில் சென்னை சேப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலக கட்டிடம் ரூ.2.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 நுகர் பொருள் வாணிபகழக சேமிப்பு கிடங்குகள், சென்னை பெரியார் நகரில் அமைக்கப்பட்டுள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க பெட்ரோல் நிலையம் ஆகியவற்றையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ்சங்கத், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் நிர்மலா, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கிர்லோஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி