இதற்கிடையில், விவேக்கின் தந்தை பெருமாள் கோயிலின் நகைகளை திருடிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். அவரை வெளியில் கொண்டுவர யாரும் உதவாத நிலையில், கடவுளிடம் முறையிடுகிறார். அப்போது அங்கு வரும் பூச்சி, இவரது அப்பாவை வெளியில் கொண்டுவர பணஉதவி செய்கிறான்.
ஜெயிலிருந்து வெளிவரும் விவேக்கின் அப்பா அவமானம் தாங்கமுடியாமல் அவரது மனைவியுடன் சேர்ந்து குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார் விவேக். தாயையும், தந்தையும் இழந்த சோகத்தில், தனது தந்தையை ஜெயிலில் இருந்து வெளிக்கொண்டுவர பண உதவி செய்த பூச்சியிடம் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக காஞ்சீபுரம் வருகிறார் விவேக்.
அங்கு பூச்சியை சந்திக்கும் விவேக்கை பூச்சி தன்னுடைய தங்குமாறு நிர்பந்திக்கிறான். விவேக்கும் பூச்சியுடன் தங்க முடிவெடுக்கிறார். காஞ்சீபுரத்தில் போளி விற்கும் நாயகி ஸ்வேதா, விவேக்கை நிலைமையைக் கண்டு பரிதாப்படுகிறாள். இந்த பரிதாபம் காதலாக உருவெடுக்கிறது. விவேக்கும் அவளிடம் மனதை பறிகொடுக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க பூச்சி ஏற்பாடு செய்கிறார்.இந்நிலையில், கும்பகோணத்தில் பூச்சி கொலை செய்தவருடைய அண்ணன் தனது தம்பியை கொன்றவர்களை பழிதீர்க்க முடிவெடுத்து, அவர்களை தேடி அலைகிறார். பூச்சியை தீர்த்துக்கட்ட முடியாத அண்ணன், தன் தம்பியை கொன்றது பூச்சிதான் என்று போலீசிடம் மாட்டிவிடுகிறார். பூச்சியையும், அவனுக்கு தலைவனான தென்னவனையும் பிடிக்க போலீஸ் திட்டம் தீட்டுகிறது. அதற்கு விவேக்கின் உதவியை நாடுகிறது போலீஸ். அதுவரை, பூச்சி பற்றிய முழு விவரங்கள் தெரியாத விவேக், பூச்சி ஒரு கொலைகாரன் என்றதும் மிகுந்த மனவேதனை அடைகிறார். அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார். இறுதியில் விவேக் பூச்சியை நல்வழிப்படுத்தி போலீசிடம் அப்ரூவராக மாறச் சொன்னாரா? தனது காதலியுடன் விவேக் கைகோர்த்தாரா? என்பதே மீதிக்கதை.
இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த விவேக், இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து, தன்னால் எந்த கதாபாத்திரத்திலும் திறம்பட நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இதுவரை மூடநம்பிக்கைகளையும், தீண்டாமையையும் காமெடியாய் சொல்லி வந்த விவேக், அதே கருத்துக்களை ஆரவாரமில்லாமல் சொல்லும்போது நம்முடைய மனதுக்கு இதமாய் இருக்கிறது.படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இருவடைய நடிப்பு கைதட்ட வைக்கிறது. குறிப்பாக, தாய், தந்தையை இழந்த சோகத்தில் இருக்கும்போது இவருடைய நடிப்பு நம்மையும் இவர்மீது பரிதாபப்பட வைக்கிறது. நாயகி ஸ்வேதா படம் முழுவதும் பாவடை தாவணியில் வலம் வருகிறார். திரையில் பார்க்க பளிச்சென்று இருக்கிறார். இவர் தம்பியுடன் சண்டை போடும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.படத்தில் நகைச்சுவை வேடமேற்று நடித்திருக்கும் செல் முருகன் வரும் காட்சிகள் கலகலப்பூட்டியிருக்கிறது. தனது குருநாதர் விவேக்கிற்கு பெருமையை தேடிக் கொடுத்துவிட்டார். பூச்சி கதாபாத்திரத்தில் வரும் வேங்கடராஜுக்கு இதுதான் அறிமுகப்படம். இருப்பினும் படத்தில் அவருக்கு மிகவும் வலுவான கதாபாத்திரம்.
அந்த கதாபாத்திரத்திற்கு இவருடைய நடிப்பு மேலும் வலுவூட்டியிருக்கிறது. தென்னவன் ஒரு சில காட்சிகளே வந்தாலும் திறம்பட நடித்திருக்கிறார். மயில்சாமி வரும் காட்சிகளும் காமெடியாக இருக்கிறது. பாலாவின் உதவியாளரான இயக்குனர் கண்ணன், பிரமாணருக்கும், ரவுடிக்கும் உள்ள உறவை அழகாக சொல்லியிருக்கிறார். கத்தி மேல் பயணிக்கும்படியான கதையில், நூல் அளவு பிசகினாலும் கதையில் பெரிய ஓட்டை விழுந்துவிடும். ஆனால், அதை பக்குவமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.கதையை எங்கேயும் போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். இப்படத்தை தயாரித்திருக்கும் லாரன்ஸ் முதல் படமே தரமான படமாக கொடுத்திருக்கிறார். இன்னும் இதுபோன்ற தரமான படங்களை தருவார் என எதிர்பார்க்கலாம். வெங்கட் கிரிஷி இசையில் பாடல்கள் பரவாயில்லை. ‘அம்மா ரொம்ப’ பாடல் சூப்பர். பின்னணி இசை ஓ.கே. ரகம்.
மொத்தத்தில் ‘நான்தான் பாலா’ அப்பாவி…….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி