அரவங்காடு கிராமத்தில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சண்டையில் சந்தானத்தின் அப்பா, சந்தானத்தின் மாமாவை கொன்றுவிட்டு அவரும் உயிரை விடுகிறார். தன் குடும்பத்தில் ஒருவரை கொன்ற சந்தானத்தின் மொத்த குடும்பத்தையும் பலிவாங்கத் துடிக்கிறார்கள் அவரின் எதிரிகள். தன் மகனின் உயிரைக் காப்பாற்ற ஊரைவிட்டு வெளியேறி சென்னைக்கு மகனை வளர்க்கிறார் சந்தானத்தின் அம்மா.சந்தானம் வளர்வதற்குள் அவரின் அம்மாவும் இறக்கிறார். அனாதையான சந்தானத்தை வளர்க்கும் அவரின் மாமா அரவங்காட்டில் சந்தானத்தின் அப்பா பெயரில் இருக்கும் 5 ஏக்கர் நிலத்தைப் பற்றி கூறுகிறார். கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தானம், அந்த இடத்தை விற்று தன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் அரவங்காடு செல்கிறார். தன்னைக் அழிக்க நினைக்கும் குடும்பத்தின் வாரிசான நாயகி ஆஸ்னாவும் சந்தானம் பயணம் செய்யும் அதே ரயிலில் பயணிக்க இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது. ஆஸ்னாவின் நட்பால் தன் நிலத்தை விற்க அவரது குடும்பத்தின் உதவியை நாடி அவர்களின் வீட்டிற்கு செல்கிறார் சந்தானம்.
27 வருடங்களாக தாங்கள் பழிவாங்கத் துடிக்கும் குடும்ப வாரிசு தான் சந்தானம் என்பதைத் அறியும் ஆஸ்னாவின் அப்பாவும், அண்ணன்களும் சந்தானத்தை கொலை செய்ய நெருங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிற்குள் நுழைந்த ஒருவரை, வீட்டில் வைத்து கொலை செய்வதில்லை என்பதால் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி கொல்லத் துடிக்கிறார்கள். இந்த விஷயம் சந்தானத்திற்கு தெரிய வர, அவர் அந்த ஆபத்திலிருந்து எப்படித் தப்பினாரா? இல்லையா? என்பதே காமெடியும்,ஆக்சன் கலந்து சொல்லி இருக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.
தன்னுடைய நீண்டநாள் ஹீரோ ஆசையை இப்படத்தின் மூலம் சந்தானம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.ஓபனிங் பாடலோடு அறிமுகமாகும் சந்தானம் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஹீரோயின் ஆஸ்னா கண்ணுக்கு லட்சணமாக இருக்கிறார். தனக்கு கிடைத்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறார். ஆஸ்னாவைத் திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளையாக மிர்ச்சி செந்தில். ஹீரோ சந்தானத்தால் கலாய்க்கப்பட்டு, ரசிக்க வைத்திருக்கிறார். இவர்களைத் தவிர ஒரு பெருங்கூட்டமே ஒரு பங்களாவுக்குள் படம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கிறது. அவரவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். அதில் ஆஸ்னாவின் அப்பா கேரக்டர், அண்ணன் கேரக்டர்கள் வெகு பொருத்தம்.
இப்படத்தில் அனைவரையும் கவரும் இரண்டு ஸ்டார்கள் ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன். மற்றும் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன். அவர்களின் அலப்பல்கள் ஆரவாரம்.
படத்தின் முதல்பாதி வழக்கம்போல் சந்தானத்தின் நக்கல், நையாண்டிகளோடு கலகலப்பாக பயணித்து, கொஞ்சம் கொஞ்சமாக கதைக்குள் நுழைகிறது. தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் ஆள்தான் சந்தானம் எனத் தெரிந்து அவரைக் கொல்லத் துடிக்க தொடங்கும் இடத்திலிருந்து கதை ஜெட் வேகம் பிடிக்கிறது. சந்தானத்திற்கும் இந்த உண்மை தெரிய வரும்போது, என்ன செய்யப் போகிறார் என்ற சஸ்பென்ஸோடு இடைவேளை விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் காமெடியைக் கொஞ்சம் குறைத்து, பரபரப்பு, சென்டிமென்ட், காதல் என ஒரு குடும்பப் படத்திற்கான அத்தனை விஷயங்களையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ வென்றான்……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி