இதற்கிடையில் கிருஷ்ணாவிற்கு கூரியர் ஒன்று வருகிறது. அதில் கொல்லி மலையில் பூர்வீகச் சொத்தான ஒரு பங்களா இருப்பதாகவும் அங்கு கருணாவை தொடர்பு கொள்ளவும் என்று செய்தி வருகிறது. அதை அறிந்த கிருஷ்ணா மற்றும் ரூபா கொல்லி மலைக்குச் செல்கிறார்கள். பூர்வீக சொத்தான பங்களாவை பார்க்கச் சென்றால் அங்கு ஒரு பாழடைந்த பங்களாவாக இருக்கிறது. அங்கு கருணாவையும் அவரது சகோதரி ஓவியாவைவும் சந்திக்கிறார்கள். அந்த பங்களாவை புதுப்பிக்க கிருஷ்ணாவும் ரூபாவும் திட்டம் தீட்டுகிறார்கள்.பிறகு சென்னைக்கு வந்து மகாநதி சங்கரின் மகனான பாலாஜிக்கு, சோனாவை திருமண செய்து வைப்பதாக கூறி அவர்கள் மூலம் 40 லட்சம் பணத்தைப் பெற்று கருணா மற்றும் ஓவியா உதவியுடன் பாழடைந்த பங்களாவை ஓட்டலாக மாற்றுகிறார்கள். ஓட்டலில் தங்குபவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இறந்தவர்களை பற்றிய விபரத்தை போலீசிடம் சொல்லாமல் சடலத்தை புதைத்து விடுகிறார்கள். போலீஸ் கிருஷ்ணாவை அழைத்து சடலங்கள் புதைத்த இடத்தில் புதையல் இருப்பதாக விசாரிக்கிறார்கள்.
ஆனால் பயந்து போன கிருஷ்ணா, போலீஸ் விசாரணையில் அங்கு புதையல் இல்லை, சடலங்கள் இருந்தது என்று விவரிக்கிறார். தற்போது அந்த இடத்தில் புதைத்த சடலங்கள் இல்லை என்றும் கூறுகிறார்.பிறகு கிருஷ்ணா போலீசாரிடம் ஓட்டலில் தங்கியவர்களை பற்றிய விவரங்களை சொல்கிறார். அதற்கு போலீஸ் நீங்கள் சொன்னவர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவர்கள் என்று விவரங்களை காண்பிக்கிறார். அப்புகைப்படங்களை பார்த்த கிருஷ்ணா அதிர்ந்து போகிறார்.இறந்தவர்கள் யார். அவர்கள் எதற்காக மீண்டும் வந்தார்கள்.என்பதை திரில்லர் படமாக சொல்லிருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் கிருஷ்ணா இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். நாயகனுக்கே உண்டான ஆடல், பாடல், சண்டைக் காட்சிகள் இல்லை என்றாலும் மிகவும் யதார்த்தமான நடிப்பால் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார்.
இதுவரை நடித்த படங்களில் ரூபா மஞ்சரிக்கு இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும். படத்தின் திரில்லிங்கை தன் நடிப்பால் மேலும் அதிகரித்திருக்கிறார். கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டியிழுக்கிறார் ஓவியா.வலுவான கதாபாத்திரத்தை ஏற்று படம் முழுக்க வலம் வருகிறார் கருணா. காமெடி, திகில் என எல்லா உணர்வுகளையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் காட்சிகளுக்கு தொய்வில்லாமல் நகைச்சுவையுணர்வோடு சிறப்பாக கொண்டு சென்றிருக்கிறார். சிறிது நேரம் மட்டும் வந்தாலும் நகைச்சுவை நடிப்பால் மனதில் நிற்கிறார் மயில்சாமி.எஸ்.என்.பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். இவரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ராமியின் ஒளிப்பதிவு ரசிகர்களை மிரட்ட வைக்கிறது.படத்தில் முதல் 15 நிமிடம் மெதுவாக சென்றாலும் அதன்பிறகு படத்தை மிகவும் நகைச்சுவையோடும் திகிலாகவும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார் இயக்குனர் டீகே. குறைவான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் விறுவிறுப்பை ஏற்றி கைத்தட்டல் பெறுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முழுமையான திகில் படத்தைக் கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில் ‘யாமிருக்க பயமே’ பயம் இல்லாதவன்……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி