இந்த படத்தை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் சில அமைப்புகள் புகார் கொடுத்துள்ளன. இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர் ஆகியோர் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, விக்ரமன் கூறியதாவது:-இலங்கை தமிழர்கள் மீது தமிழர்கள் எல்லோருக்கும் இருக்கும் அதே உணர்வு, எங்களுக்கும் இருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக எந்த பிரச்சினை நடந்தாலும், அதை கண்டித்து முதலில் குரல் கொடுப்பது, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்தான். காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்தபோது, நெய்வேலியில் போராட்டம் நடத்தினோம்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ராமேசுவரத்தில் ஊர்வலமாக சென்றோம். முல்லைபெரியாறு பிரச்சினைக்காகவும் குரல் கொடுத்தோம். ‘இனம்’ படம் இலங்கையில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை தெளிவாக படம் பிடித்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக எந்தவொரு காட்சியும், கருத்தும் இல்லை. தணிக்கை ஆன பின் ஒரு படத்தை தடை செய்யவேண்டும் என்று கூற எந்த அமைப்புக்கும் உரிமை கிடையாது.இவ்வாறு டைரக்டர் விக்ரமன் கூறினார்.
டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:- இயக்குனர்களின் படைப்பு சுதந்திரம் பறிபோகக்கூடாது. பாதுகாக்கப்படவேண்டும். அதை பாதுகாப்பது எங்கள் தலையாய கடமை. இலங்கை தமிழர்கள் பிரச்சினையை ‘இனம்’ படம் மிகத்தெளிவாக படம்பிடித்து காட்டியிருக்கிறது.இதைவிட சிறப்பாக இயக்கமுடியாது. நான் இயக்கிய ‘குற்றப்பத்திரிகை’ படத்தைவிட, ‘இனம்’ படம் நூறு மடங்கு வீரியமானது. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை உலகளவில் கொண்டுபோய் சேர்க்கக்கூடியது. இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று கேட்காதீர்கள்.டைரக்டர் வி.சேகர் கூறும்போது, ‘இனம்’ படத்தில், ‘இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் மிக ஆழமாக சொல்லப்பட்டுள்ளன’ என்றார். டைரக்டர்கள் பாலாஜி சக்திவேல், சசி, சண்முகசுந்தரம், ரவிமரியா, வேல்முருகன் ஆகியோரும் ‘இனம்’ படம் பற்றிய தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி