அதன்படி, ஒரு ரெயிலில் ஏறி பயணமாகிறார்கள். அதே ரெயிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு எரிகாவுக்கு நன்கு அறிமுகமான சுமன் ஷெட்டியும் பயணமாகிறார். சுமன் பணம் கொண்டு வருவது தெரிந்தவுடன் அதை பத்திரமாக கொண்டு சேர்க்க எரிகாவும் உறுதி தருகிறார். ஆனால், நாயகனுக்கோ அந்த பணத்தின் மீது ஒரு கண் இருக்கிறது.இந்நிலையில், அதே ரெயிலில் தாய்லாந்து ராணியின் கழுத்தில் கிடந்த கறுப்பு வைரத்தை திருடிய கும்பல் பயணிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க, அந்த கும்பலை பிடிக்க ரகசியமாக போலீசும் பயணம் செய்கிறது. இந்நிலையில், சுமனின் பணத்தை திருட ஒரு கொள்ளை கும்பலும் முயற்சிக்கிறது.
அந்த கொள்ளைக் கும்பலிடம் இருந்து நாயகிக்காக சுமனின் பணத்தை காப்பாற்றுகிறான் சுஜீவ். இதனால் நாயகன் மீது நாயகிக்கு காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் நாயகனுக்கும் அந்த பணத்தின் மீது ஆசை வந்துவிட, நாயகிக்கு தெரியாமலேயே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, பணம் திருடு போய்விட்டதாக நாயகியிடம் நாடகமாடுகிறார். ஆனால், நாயகிக்கு நாயகன்தான் அந்த பணத்தை திருடியது என்பது தெரிந்துவிடுகிறது. நாயகனுடன் சண்டைபோட்டு அந்த பணத்தை வாங்கி சுமனிடம் ஒப்படைக்கிறார். நாயகன் மீது வெறுப்பும் கொள்கிறார். இருந்தாலும், சுமனிடம் உள்ள பணத்தை கைப்பற்ற கொள்ளைக் கும்பல் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறது.
இந்த முயற்சியை நாயகன் முறியடித்தாரா? நாயகனும், நாயகியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? கறுப்பு வைரத்தை திருடிய கும்பலை போலீஸ் பிடித்ததா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சுஜீவுக்கு இளம் ஹீரோவுக்குண்டான அத்தனை அம்சமும் இருக்கிறது. ஆனால், நடிப்பு தான் வரவில்லை. குறிப்பாக நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமே காட்டாமல் நடித்திருப்பது பார்க்க சலிப்பை ஏற்படுத்துகிறது.நாயகி எரிகா அழகாக இருக்கிறார். இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சோகமான காட்சிகளில் நடிக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். சுமன் ஷெட்டிக்கு ரொம்பவும் அப்பாவியான கதாபாத்திரம். குழந்தைத்தனமான நடிப்பில் அசத்துகிறார். துப்பறியும் நிபுணராக வரும் மனோபாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மிரட்டியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக வரும் பெண் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.
ஒரு ரெயிலுக்குள்ளேயே படம் முழுவதையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டி.குமார். ரெயிலுக்குள்ளேயே இவ்வளவு வித்தியாசமான காட்சியமைப்புகளை காட்டமுடியுமா? என்பதில் வென்றிருக்கிறார். ஆனால், ஆக்ஷன் கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் தோல்வி கண்டிருக்கிறார். இறுதிக்காட்சியில் முரட்டு வில்லனை ஒல்லிப்பிச்சான் ஹீரோ அடித்து துவம்சம் செய்வதை ரசிக்க முடியவில்லை.தரணின் இசை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. ஆண்ட்ரியா பாடிய பாடல் அருமை. ஆனால், அந்த பாடலை இறுதியில் வைத்து கடைசி வரை படத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரது கேமரா ரொம்பவும் பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘விரட்டு’ பரவாயில்லை…….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி