மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது உங்கள் பாணி. இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் விலகியிருக்கிறதே?
இந்தப் படத்தின் களம்தான் அதற்கு காரணம். சென்னை, துபாய் என்று சொந்த ஊரை விட்டு வந்தவர்கள் மூன்று நாட்கள் திருவிழாவிற்காக மீண்டும் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். அங்கே அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இது ‘ஒன்லி பீல் குட்’ படம்.முழுக்க ஒன்று சிரிப்பாங்க அல்லது அழுவாங்க. அவ்வளவுதான். அதற்கான கதா பாத்திரங்களை கொண்டு இந்தப் படத்தை படமாக்கியிருக்கிறேன். ஷூட்டிங் நடக்கும் போதே ‘யார் ஹீரோ, ஹீரோயின்’ என்று கேட் டார்கள். நானும் என்ன சொல்வதென்றே தெரியாமல் படப்பிடிப்பை தொடங்கி, முடித்திருக் கிறேன். ஆனால், எல்லோருமே படத்தை திரையில் பார்த்து சந்தோஷப்படாமல் இருக்கப் போவதில்லை.
‘தெய்வத்திருமகள்’ சாரா சிறுமிதான் கதையின் நாயகி போல?
அவளும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறாள். ‘தெய்வத்திருமகள்’ படம் இயக்கும் போதே நினைத்தேன், சாரா இந்தப்படத்திற்காகவே பிறந்திருக்கிறாள் என்று. அவள் ஒரு தேவதை. இந்தப்படத்தில் அவ்வளவு மெச்சூரிட்டியாக நடித்திருக்கிறாள்.
ஒரு கதை அதற்கான விஷயத்தை தானே தேடிக்கொள்ளும் என்பார்கள். அப்படித்தான் நாசர், லுத்புதின் பாஷா, சாரா என்று இந்தபடத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகாக கவிதை மாதிரி வந்து ஒட்டிக்கொண்டார்கள்.
நீரவ்ஷா, ஜி.வி.பிரகாஷ் இப்படி ஒரே கூட்டணியோடு தொடர்ந்து பயணிக்கிறீர்களே?
என்னுடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சாயலில் இருக்கும். உயிரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது படத்தில் அவசியம் என்று இருப்பேன். அந்த வேல்யூஸோடுதான் நாங்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்த படங்களை நோக்கி பயணிக்கிறோம். ஒரு படம் போகும்போது அடுத்த படத்திற்கான விவாதத்தில் இறங்கிடுவோம்.அப்படியே அந்த டீம் அடுத்த வேலைகளில் ஈடுபடத்தொடங்கிடுவோம். விளம்பரப்படங்கள் செய்யும்போது நிறைய கேமராமேன்களோடு வேலை பார்த்திருக் கிறேன். சினிமா என்று வரும்போது நான், நீரவ்ஷா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி அதிகம்தான். எங்களுக்குள் நல்ல புரிதல். இப்போதைக்கு எல்லாம் நல்லா போகிறது. மத்தவங்க ஒரே கூட்டணி என்று சொல்லும்போதுதான் அதைப்பற்றி யோசிப் போம். மற்றபடி அவரவர் வேலைகளை பிரித்துக் கொண்டு கவனிக்கிறோம்.
மாஸ் ஹீரோக்களை வைத்து படம் செய்யும் போது அவர்களுடைய தலையிடல்கள் அதிகம் இருக்கிறதா?
இதுவரைக்கும் ஒரு படத்தில்கூட நான் அப்படி அனுபவித்தது இல்லை. விஜய், விக்ரம் எல்லோருமே 100 சதவீதம் தன்னை ஒப்படைத்தனர். கதைக்காக சில விஷயங்களை பரிமாறிக் கொள்வோம்.
உங்களுடைய ‘தாண்டவம்’ படத்தின் மேக்கிங் ஸ்டைல் அழகாக அமைந்திருக்கும். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லையே?
நடிகர் கார்த்தி, ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் வந்திருக்க வேண்டிய படம்’ என்று சொன்னார். என்னோட ஐடியா சமயத்தில் தோல்வி அடையலாம். நான் தோல்வி அடைந்து விடக்கூடாது. இப்படி ஆகும்போது மற்றவர்கள் என்னோட ஐடியாவுக்குள் வரவில்லை என்று எண்ணி அடுத்தடுத்த வேலைகளை தொடர ஆரம்பித்து விடுவேன். இதுவரைக்கும் ஒரு இயக்குநராக நான் தோற்றதே இல்லை. அது போதும்.
அடுத்து?
ஆர்யாவை வைத்து மிதக்க மிதக்க ஒரு காதல் படம்.
திருமணம் எப்போது?
நிச்சயம் இந்த ஆண்டில் நடக்கும். ‘சைவம்’ படம் வெளிவந்ததும் யார் அந்த பெண் என்று சொல்லிவிடுகிறேன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி