செய்திகள்,திரையுலகம் ஆக்சன் கிட்ஸ் (2014) திரை விமர்சனம்…

ஆக்சன் கிட்ஸ் (2014) திரை விமர்சனம்…

ஆக்சன் கிட்ஸ் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஆக்சன் கிட்ஸ் 5 சிறுவர்களை பற்றிய கதையமைப்பை கொண்ட படம். வுட், காட், போங், வூன் மற்றும் ஜிப் ஆகிய ஐந்து சிறுவர்களும் வீரக்கலைகளை கற்றுத்தரும் ஒரு பள்ளியில் வளர்ந்து வருகின்றனர். ரவுடி கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் இவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதோடு, இதய நோயால் அவதிப்பட்டு வரும் வூன்னின் நிலைமை மிகவும் மோசமடைகிறது.

அவனுக்கு மாற்று இதயம் பொருத்த முடிவெடுக்கும் நண்பர்கள், அவனுக்கு பொருந்தக்ககூடிய இதயம் ஒரு மருத்துவமனையில் உள்ளதை அறிகின்றனர். அந்த மருத்துவமனை அப்போது தீவிரவாதிகளால் கைப்பற்றப்படுகிறது.

தீவிரவாதிகளின் பிடியில் உள்ள அந்த மருத்துவமனையில் இருக்கும் இதயம் இவர்களுக்கு கிடைத்ததா? வூன்னிற்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா? அல்லது தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்களா? என்பதே மீதி கதை.

தாய்லாந்து நாட்டுப் படங்களில் நல்ல கதையம்சத்திற்கு பதிலாக கண்ணைக் கவரும் சண்டைக் காட்சிகளே இடம்பெற்று வரும் நிலையில் இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்படத்தில் நடித்துள்ள அசாத்திய திறமை கொண்ட ஐந்து சிறுவர்களும் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இத்திரைப்படம் ‘3 நிஞ்சாஸ்’ மற்றும் ‘டை ஹார்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் கலந்த கலவையாக உள்ளது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. தாய்லாந்து நாட்டின் தற்காப்பு கலையை அழகாக காட்சிப்படுத்தி சிறந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

படம் தொடங்கிய முதல் 30 நிமிடங்கள் இழுவையாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்பாக நகர்கிறது. இத்திரைப்படத்தில் தமிழில் வெளிவந்த ‘7 ஆம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானி நிகுயென் (டாங்லி) மருத்துவமனையை கைப்பற்றும் தீவிரவாதிகளின் தலைவனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருக்கு இப்படத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக்குறைவு. சண்டைக்காட்சிகளை படம்பிடிப்பதில் இயக்குனர் கிரிஸ்சன்னாபாங் ரச்சாட்டா அசத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஆக்சன் கிட்ஸ்’ சண்டை படம்…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி