டி.வி. டூ சினிமா. எப்படி சாத்தியம்?
ஒரு டி.வியில் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தினாங்க. அதுல கலந்துகிட்டேன். கஷ்டப்பட்டு ஆடி, கடைசியில் தேர்வு செய்யப்பட்டேன். அந்த நேரத்துல சினிமா வாய்ப்பு வந்தது. அவர்களும் இவர்களும் படத்தில் ரெண்டு ஹீரோயின்களில் ஒருத்தியா நடிச்சேன். முதல் படமா இருந்தாலும், தனி ஹீரோயினா நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கல. ஆனா, அதுக்காக நான் வருத்தப்படல. வந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்னு என் மனசை நானே தேத்திகிட்டேன். அந்த தன்னம்பிக்கைதான் இவ்வளவு தூரம் என்னை கூட்டிகிட்டு போயிருக்கு.
தொடர்ந்து டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்?
அதுக்கு நான் என்ன பண்றது? தமிழில் எந்த படத்தை எடுத்துகிட்டாலும், அதில் ரெண்டு, இல்லன்னா, மூணு ஹீரோயின்கள் இருக்கிற மாதிரிதான் கதை எழுதுறாங்க. ஆடியன்சும் ஒரு படத்தில் ரெண்டு, மூணு ஹீரோயின்களை பார்க்கத்தான் ஆசைப்படறாங்க. எல்லா படத்திலும் ரெண்டு ஹீரோயின்கள் நடிக்கிறது தவிர்க்க முடியாத விஷயமாயிடுச்சி. அவர்களும் இவர்களும் ரிலீசான பிறகு சட்டப்படி குற்றம், உயர்திரு 420, அட்ட கத்தி, ரம்மி படங்களில் ரெண்டு ஹீரோயின்களில் ஒருத்தியா நடிச்சேன். பண்ணையாரும் பத்மினியும் படத்தில் மட்டும் தனி ஹீரோயின்.
வில்லேஜ் ரோலை விடவே மாட்டீங்களா?
நானா அதை பிடிச்சுகிட்டிருக்கேன்? அந்த மாதிரி வாய்ப்புதான் வருது. வில்லேஜ் ரோல்களில் நடிக்கிறதுக்கும் திறமை வேணும். மாடர்ன் கேரக்டர்கள் பண்ண நிறையபேர் இருக்காங்க. வில்லேஜ் ரோலுக்குன்னு சிலபேர் மட்டும்தான் இருக்காங்க. நான் எப்படி நடிச்சாலும் ரசிகர்கள் பார்ப்பாங்க. ஒரு நடிகையா பலவிதமான கேரக்டர்களில் நடிச்சு திறமையை வெளிப்படுத்தணும். எல்லாமே நாம் நினைச்ச மாதிரி நடந்துடாது. நாம் எதிர்பார்க்கிற வாய்ப்புகள் கிடைக்கலன்னா, கிடைச்ச வாய்ப்புகளை வச்சு முன்னுக்கு வர பார்க்கணும். திருடன் போலீஸ் படத்தில் மாடர்ன் கேரக்டரில் நடிக்கிறேன். காக்காமுட்டை படத்தில் ஸ்லம் ஏரியாவில் வசிக்கும் பொண்ணா நடிக்கிறேன்.
நீச்சல் டிரெஸ் போடுவீங்களா?
நான் கிளாமர் டிரெஸ் போட்டு நடிச்சா பொருந்தமா இருக்குமா? கவர்ச்சியா நடிக்கிறதுக்குன்னு நிறையபேர் இருக்காங்க. அவங்க கூட போட்டி போட எனக்கு விருப்பம் இல்ல. எனக்குன்னு ஃபேமிலி இமேஜ் இருக்கு. அதை கடைசிவரை காப்பாத்தினா போதும். ஆக்டிங் ஸ்கோப் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன். நீச்சல் டிரெஸ் போட மாட்டேன். அது எனக்கு பொருத்தமாவும் இருக்காது. அந்த டிரெஸ்சில் என்னை பார்க்க எனக்கே சகிக்காது.
விஜய் சேதுபதிக்கும் உங்களுக்கும்..?
அய்யா சாமி. ஒரு பெரிய கும்பிடு. என்னடா இதுவரை என்னை பற்றி ஒரு கிசுகிசுவும் வரலையேன்னு பார்த்தேன். அவருக்கும், எனக்கும் எதுவும் இல்ல. அவர் எனக்கு சிபாரிசு பண்ணி வாய்ப்பு வாங்கி தர்றாருன்னு எழுதறாங்க. அப்படி இருந்தா, அவர் நடிக்கிற எல்லா படத்திலும் நான்தானே ஹீரோயினா நடிக்கணும்? இதிலிருந்தே தெரியலையா, இதெல்லாம் வதந்தின்னு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி