செய்திகள் உலகின் அபூர்வமான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்…

உலகின் அபூர்வமான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்…

உலகின் அபூர்வமான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்… post thumbnail image
மெல்போர்ன்:-ஃப்ளமிங்கோஸ் என்றழைக்கப்படும் பூநாரைகள், நாரை வகையை சேர்ந்த பறவையினமாகும். கரையோரப் பறவையாகிய இவ்வகை நாரைகள் ‘போனிகொப்டிரஸ்’ அபூர்வ இனத்தை சேர்ந்தவை.

இவ்வகை ஃப்ளமிங்கோ பறவையில் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்தில் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வந்தது. 1933-ம் ஆண்டு அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு இந்த பறவை வந்ததாக இங்குள்ள ஆவணங்களில் பதிவாகியுள்ளது.எனினும், இது எந்த நாட்டில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது? என்பது தொடர்பான தகவல்களுக்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை. இரண்டு வயது குஞ்சாக இங்கு வந்த இந்த ஃப்ளமிங்கோ பறவை, ‘கிரேட்டர்’ என்ற பெயருடன் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

கடந்த 2008-ம் ஆண்டு சில விஷமிகள் கிரேட்டரை அடித்து படுகாயப்படுத்திய போதிலும் வெகு வேகமாக குணமடைந்து, தனது ஒய்யார நடையழகால் அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு அழகு சேர்த்து வந்தது. சமீப காலமாக, முதுமையால் கண்பார்வை மங்கி, உடல் நலம் குன்றிய கிரேட்டர், சோர்வாக காணப்பட்டதையடுத்து வன விலங்கு காப்பக மருத்துவர் குழு சில நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், சிகிச்சை பலனளிக்காததால் அதன் உடல்நிலை மேலும் மோசமடைந்து கிரேட்டர் துடிப்பதை பார்த்து பரிதாபப்பட்ட மருத்துவர்கள், கருணை அடிப்படையில் செயற்கை முறையில் இந்த உலகத்தை விட்டு விடையளித்து கிரேட்டரை வழியனுப்பி வைத்தனர்.

முதிர்ந்த வயதான கிரேட்டரை காப்பாற்ற வேறு சிகிச்சை முறைகள் ஏதுமில்லாததால் இந்த வருத்தத்துக்குரிய முடிவை எடுக்க நேர்ந்ததாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிக வயதான கிரேட்டரின் குஞ்சுகளில் ஒன்றான ‘சில்லி’ மட்டும் தற்போது அடிலெய்ட் வன விலங்கு காப்பகத்தை சுற்றிச் சுற்றி வருகிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஒரே ஃப்ளமிங்கோ இனப் பறவை சில்லி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேட்டர் ஒய்யார நடை பயின்ற குட்டையின் அருகே அதன் நினைவாக சிலை ஒன்றினை அமைக்க அடிலெய்ட் வன விலங்கு காப்பக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி