உலக அளவில் தினமும் சிகரெட் புகைக்கும் ஆண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது என ஆய்வு முடிவில் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.இது குறித்து அமெரிக்க மருத்துவ அமைப்பு பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ள தகவலில், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 74.5 மில்லியனாக இருந்தது. இது தற்போது 110 மில்லியனாக உயர்ந்துள்ளது.கடந்த 2012ம் ஆண்டில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 12.1 மில்லியனாக இருந்தது. இது 1980ம் ஆண்டில் 5.3 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்தது. அமெரிக்காவை தவிர்த்து மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது அதிக எண்ணிக்கை ஆகும்.
வாஷிங்டன் பல்கலை கழகத்தில் சுகாதார பிரிவு மதிப்பீட்டு துறையில் உதவி பேராசிரியராக உள்ள மேரீ இங் கூறும்போது, கடந்த 2006ம் ஆண்டில் இருந்து ஆசிய நாடுகளில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா, வங்காளதேசம், சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் கொள்கைகளை அமல்படுத்தி உள்ள நிலையில் புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நாடுகளில் புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆய்வின்படி, 1980ம் ஆண்டில் 721 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்து 2012ம் ஆண்டில் 967 மில்லியனாக புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது உலக அளவில் சிகரெட் புகைப்பதில் 26 சதவீதம் அதிகரித்து உள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்த 32 வருட காலத்தில் தினமும் சிகரெட் புகைப்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும் அது தெரிவிக்கின்றது. 15 வயதிற்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை அதிகரித்ததால் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகளவிலான சுகாதாரத்தை மேம்படுத்த புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையிலான விரிவான முயற்சிகளை உள்ளடக்கியதாக திட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி