நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் முதலாவது அரைஇறுதியில் உலக தரவரிசையில் 52-வது இடம் வகிக்கும் பிரான்சின் ரோஜர் வாசெலினும், 38-ம் நிலை வீரர் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்சும் பலப்பரீட்சை நடத்தினர்.இருவரும் சர்வீஸ் போடுவதிலும், வலுவாக பந்தை திருப்பி அடிப்பதிலும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டியதால், ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. ரசிகர்களும் பாரபட்சமின்றி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். முதல் செட்டை வாசெலின் கைப்பற்ற, 2-வது செட்டில் கிரானோலர்ஸ் இரு ‘சர்வீஸ் பிரேக்’குடன் பதிலடி கொடுத்தார்.வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் அனல் பறந்தது. இதில் ரொம்ப ஆக்ரோஷமாக ஆடிய வாசெலினின் கை ஓங்கியது. 6-வது கேமில் கிரானோலர்சின் சர்வீசை வாசெலின் முறியடித்தது திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வாசெலின், தொடர்ந்து தனது சர்வீசையும் வசப்படுத்தி மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இதன் பின்னர் எதிராளியின் 8-வது கேமை கண்டுகொள்ளாமல் விட்ட அவர், 9-வது கேமில் தனது சர்வீசில் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
2 மணி 2 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் வாசெலின் 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்து சென்னை ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். பிரான்ஸ் வீரர் ஒருவர் சென்னை ஓபன் இறுதி சுற்றில் அடியெடுத்து வைப்பது 14 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2000-ம் ஆண்டில் பிரான்சின் ஜெரோம் கோல்மார்ட் இங்கு இறுதிப்போட்டிக்கு வந்ததுடன், பட்டமும் வென்றது நினைவு கூரத்தக்கது.30 வயதான வாசெலின் இதுவரை எந்த ஒரு ஏ.டி.பி. ஒற்றையர் பட்டத்தையும் வென்றதில்லை.
இரவில் நடந்த 2-வது அரைஇறுதியில் போட்டித் தரநிலையில் முதலிடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவும், கனடாவின் வாசெக் போஸ்பிசிலும் மோதினர். சென்னை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவான வாவ்ரிங்கா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஓரளவு எளிதாக தனதாக்கினார்.ஆனால் 2-வது செட்டில் வாசெக் போஸ்பிசில் எழுச்சி பெற்றார். வாவ்ரிங்காவே வியக்கும் அளவுக்கு பிரமாதமாக விளையாடினார். இதனால் களத்தில் ‘நீயா-நானா’ போட்டி கடுமையாக இருந்தது. 2-வது செட்டில் இருவரும் 5-5 என்று சமநிலையில் இருந்த போது, முதுகுவலி காரணமாக வாசெக் விலகுவதாக அறிவித்தார். இதனால் 28 வயதான வாவ்ரிங்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முழுமை பெறாத இந்த ஆட்டம் 1 மணி 50 நிமிடங்கள் நடந்தது.
உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா சென்னை ஓபனில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்த அவர், 2011-ல் இங்கு பட்டம் வென்றிருந்தார்.இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் வாவ்ரிங்கா-வாசெலின் மோத உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் தலா ஒன்று வீதம் வெற்றி கண்டுள்ளனர். இருவரும் சவால்மிக்க வீரர்கள் என்பதால் இறுதிப்போட்டியில் ரசிகர்களுக்கு சுவையான விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
வாவ்ரிங்கா கூறுகையில், ‘இறுதிப்போட்டி கடினமாக இருக்கும். வாசெலினின் ஆட்டத்தை நான் நேரில் பார்த்தேன். அவரது சர்வீசும், பந்தை திருப்பி அடிக்கும் விதமும் உண்மையிலேயே அபாரமாக இருந்தது. கடைசியாக அவரை சந்தித்த சுவிஸ் உள்ளரங்க போட்டியில் என்னை தோற்கடித்து இருந்தார். என்றாலும் என்னால் பட்டம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி