சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:-
தேமுதிக கரைந்து போவதாகச் சிலர் சொல்கின்றனர். தெய்வத்தையும், மக்களையும் நம்பித்தான் கட்சியைத் தொடங்கினேன். மக்கள் என் பக்கம் உள்ளவரை தேமுதிகவை யாரும் அசைக்க முடியாது.
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை சிலர் இந்தக் கூட்டத்தில் திட்டிப் பேசினர்.
அவர்களைத் திட்டாமல் வாழ்த்தியா அனுப்ப முடியும்?
எம்மதமும், எல்லா ஜாதியும் தேமுதிகவுக்குச் சமம். அதனால்தான் எல்லா விழாக்களையும் கொண்டாடி வருகிறோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்வெட்டுப் பிரச்னையைப் போக்குவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் இருக்கும், தமிழகத்தில் இருக்காது என்று கூறினார்.
ஆனால் இதுவரை மின்வெட்டுப் பிரச்னையைப் போக்கவில்லை. தமிழகம் இருட்டாகவே உள்ளது.
இங்கு பேசிய பேராயர் எஸ்றா.சற்குணம், நல்லவர்களும் வல்லவர்களும் (திமுக, தேமுதிக) ஒன்றாகச் சேர வேண்டும். பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கக் கூடாது என்று கூறினார். அவரது கருத்தை பரிசீலிப்பேன் என்றார் விஜயகாந்த்.
விழாவில் பேசிய எஸ்றா. சற்குணம், “ஒரு விமானத்துக்கு 2 கேப்டன்கள் உண்டு. பெரிய விமானங்கள் என்றால் 3 கேப்டன்கள்கூட உண்டு.
அதுபோல் கேப்டன் விஜயகாந்த் வேறு சில கேப்டன்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
பேராயர்கள் எஸ்.ராஜாசிங், ஜெ.ஜான், தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், தலைமை நிலையச் செயலாளர் ப.பார்த்தசாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி