இலங்கை இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஆனால் இசைப் பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றி வருகிறது.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா உயிரோடு கைது செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தினர் வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இலங்கை ராணுவத்தினர் 6 பேர் இசைப் பிரியாவை பிடித்து வருவதும் அப்போது அவர்கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறுவதும் அதற்கு அவர் ஐயோ அது நானில்லை என்று அழுவதும் அந்த காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சியின் மூலம் இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலையிலும், துணி அகற்றப்பட்ட நிலையிலும் இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த புதிய போர்க்குற்ற ஆதார வீடியோ வெளியாகி இருப்பது அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைகளமான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சர்வதேசமும் கையாலாகாத தமிழ்நாடும் கைகட்டி வாய்பொத்தி இருப்பது நாம் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நடுங்க வைக்கிறது. பிரபாகரனையும் தமிழீழ விடுதலை புலிகளையும் அவர்கள் கையாண்ட முறைகளையும் மையப்படுத்தி இத்தனை நாள் அரசியல் நடத்திய ராஜபக்சே சகோதரர்கள் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழர்களுக்கு எந்த வித உரிமைகளை வழங்காமல் மேலும் சர்வதேசத்தை எல்லா வகையிலும் ஏமாற்றி கொண்டிருப்பது இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி