“நான் கோபப்படுவதாகவும், எனக்கு மேடை நாகரீகம் தெரியாது என்றும் பேசுகிறார்கள். நான் மனதில் பட்டதை பேசுகிறேன். மற்றவர்களைப் போல் எழுதி வைத்துக் கொண்டு பேசும் பழக்கம் என்னிடம் கிடையாது. நான் பேசுவதில் தவறு இருந்தால், மக்கள் தான் மன்னிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவதன் காரணம் தெரியுமா? அடிக்கடி கோபப்படுவதால் தான் அமைச்சர்களை மாற்றுகிறார். மக்களுக்காவும், மக்கள் பிரச்சனைகளுக்காவும் தான் நான் பேசுகிறேன். இதற்காகத் தான் என் மீது வழக்கு போடுவார்கள் என்றால், ஆயிரம் வழக்குகளைக் கூட நான் சந்திக்க் தயாராக இருக்கிறேன். அதற்காக பயப்பட மாட்டேன்.
மனிதனுக்கு கோபம் வருவது இயற்கை. கோபம் வந்தால் பேசக் கூடாதா? மக்கள் பிரச்சனையை அவர்களுக்காக பேசக் கூடாதா?. நான் அப்படி பேசினால் விஜயகாந்த் குடித்துவிட்டு பேசுகிறார் என்கின்றனர். ஒரு சில அரசியல்வாதிகள் சாதி, மதங்களை கையில் வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். எம்மதமும் சம்மதம் என்பது எனது கொள்கை. பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கிறேன். சென்னையில் வழியெங்கும் குப்பையாகக் கிடக்கிறது. ஆனால் மேயர் சைதை துரைசாமியோ போர்க்கால நடவடிக்கையில் குப்பைகள் அகற்றப்படுவதாக கூறுகிறார். என் அலுவலகத்திற்கு அருகில் கூட மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. இது போன்ற பிரச்சனைகள் குறித்து மக்கள் அப்பகுதி கவுன்சிலரிடம் தெரிவித்தால் எம்.எல்.ஏ.வை பார்க்கச் சொல்கிறார்கள். எம்.எல்.ஏ.வை பார்த்தால் கவுன்சிலரை பாருங்கள் என்கிறார்கள். இப்படி தான் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விஜயகாந்த் போன்று யாரும் குரல் கொடுத்திருக்க முடியாது. இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டின் மூலம் போர்க்குற்றவாளியான ராஜபக்சே காமன்வெல்த் அமைப்பின் தலைவராகும் சூழல் உருவாகும். அதன் மூலம் ராஜபக்சே தனது மீதுள்ள களங்கத்தை நற்பெயராக மாற்றக்கூடும். அதனால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றார்.
கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுத்த அரசு, தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட வி.வி. மினரல் அதிபர் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பி.ஆர்.பழனிச்சாமிக்கு ஒரு சட்டம். வைகுண்டராஜனுக்கு ஒரு சட்டமா? இதிலிருந்து, தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தேமுதிக ஒரு நாள் ஆட்சியை பிடிக்கும். ஏற்கெனவே ஆட்சி செய்தவர்கள் மக்களை ஏமாற்றி விட்டார்கள். ஏமாற்றியவர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று ஆவேசமாகக் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி