ஈழ தமிழர்களின் தாயகமான வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வாக்குகளைப் பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தம் பதிவான தபால் வாக்குகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் 7,625 வாக்குகள் கிடைத்தன. மன்னார் மாவட்டத்தில் 1,300 வாக்குகளையும், வவுனியா மாவட்டத்தில் 901 வாக்குகளையும், கிளிநொச்சி மாவட்டத்தில் 756 வாக்குகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 646 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே முன்னணியில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதியில் வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 38 தொகுதிகளில் 30 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கூட்டணியின் முதன்மை வேட்பாளரான ஓய்வுபெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதல்வராக பதவியேற்கிறார்.
ராஜபக்சேவின் கட்சிக்கு 7 இடங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது. ராஜபக்சேவின் ஆதரவு பெற்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. வடக்கு மாகாண தேர்தலில் பதிவான வாக்குகளில் 66 சதவீதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணிக்கு கிடைத்துள்ளது. கிளிநொச்சியில் 81 சதவீதமும், முல்லைத்தீவில் 78 சதவீதமும் ஆதவாக கிடைத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணிக்கு இரண்டு நியமனத் தொகுதிகள் கிடைக்கும் என்பதால், அதன் பெரும்பான்மை 32 ஆக உயரும்.
* நன்றி : கார்டூனிஸ்ட் பாலா – http://truthdive.com/2013/02/13/gory-lanka.html
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி