ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது உரைக்குப் பதிலாக போர்ச்சுக்கல் நாட்டு அமைச்சரின் உரையை மாற்றிப் படித்து தர்ம சங்கடத்துக்குள்ளானார்.
மூன்று நிமிடம் அவர் உரையை படித்த பிறகே அருகில் இருந்த ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் தவறை உணர்ந்து, அதை அமைச்சருக்கு சுட்டிக் காட்டினார். இதையடுத்து சரியான உரையை கிருஷ்ணா படித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபை கருத்தரங்கில் கலந்து கொண்ட எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் போர்ச்சுகீசிய அமைச்சரின் உரையின் நகலும் அந் நாட்டுக் குழுவினரால் வழங்கப்பட்டது. அதை வாங்கி தனது உரையுடன் சேர்த்து வைத்துக் கொண்டார் கிருஷ்ணா.
கிருஷ்ணா உரையாற்றும் நேரம் வந்தவுடன், தனது உரைக்குப் பதிலாக, தன்னிடம் இருந்த போர்ச்சுக்கல் அமைச்சரின் உரையைப் படிக்க ஆரம்பித்தார்.
முதலில் சில பாராக்கள், ஐ.நா.பாதுகாப்பு சபை தொடர்புடைய பொதுவான கருத்துக்கள் இருந்ததால் அது தவறான உரை என்பதை அவராலோ, அருகில் இருந்த அதிகாரிகளாலோ உடனடியாக உணர முடியவில்லை.
ஆனால், “போர்ச்சுக்கல் மொழி பேசும் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இரு நாடுகளின் உறுப்பினர் இங்கு இருப்பது… என்ற வாசகங்களை அவர் படிக்க ஆரம்பித்தபோது தான் இந்திய அதிகாரிகள் தவறை உணர்ந்தனர்.
உடனடியாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் ஹர்தீப்சிங் பூரி, அதை எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் சுட்டிக்காட்டினார். அதற்குள் 3 நிமிடங்கள் உரையாற்றிவிட்ட கிருஷ்ணா, திகைத்துப் போய் அதை நிறுத்திவிட்டு சரியான உரையை எஸ்.எம்.கிருஷ்ணா வாசிக்க ஆரம்பித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.