தமிழக அரசு இலவசமாக அளிக்கும் பொங்கல் பைகளில் இடம் பெற்றிருப்பது திமுகவின் சின்னமான உதயசூரியன் அல்ல, அது வேறு சூரியன் என்று கூறியுள்ளார் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கு் இலவசமாக பொங்கல் பொருட்களை வழங்குகிறது. இந்த பொங்கல் பொருட்கள் ஒரு பையில் போடப்பட்டு அவை மக்களுக்குத் தரப்படுகின்றன. இந்த பையில் உதயசூரியன் சின்னம் இடம் பெற்றிருப்பதாக நாம் தமிழர் தலைவர் சீமான் உளளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. அதிமுக உறுப்பினர் தங்கமணி இதுகுறித்துக் கூறுகையில், தொலைநோக்கு பார்வையில்லாத, விலைவாசியை குறைக்க நடவடிக்கை இல்லாத உரை. `தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்று சொன்ன காலம்போய் 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்றாலே தலைகுனிந்து நிற்கும் நிலை தான் உள்ளது. தாலிக்கு தங்கமில்லை, தாளிக்க வெங்காயமில்லை. கட்டுமான பொருட்களின் விலை கட்டிடங்களை விட உயரத்துக்கு சென்றுவிட்டது தான் சாதனையா?
மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் அரசு இலவசமாக தரும் பொங்கல் பையில் முதல்வரின் படமும், உங்கள் கட்சி சின்னமும் போட்டு விளம்பரம் செய்வது என்ன நியாயம்? என்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் வேலு, பொங்கல் நாளான்று சூரியனை வழிபடுவதற்காக தமிழர்கள் பொங்கல் வைக்கிறார்கள். அதனை நினைவுபடுத்தும் வகையில் குடும்பத்தோடு சூரியனை வழிபடும் காட்சிதான் இலவச பொங்கல் பொருள்கள் பையில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் இருக்கும் சூரியன் வேறு. திமுகவின் சின்னமான உதயசூரியன் வேறு என்றார்.
அப்போது குறுக்கிட்ட கே.ஏ.செங்கோட்டையன், நிலா வெளிச்சத்திலும் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. மாட்டுப் பொங்கல் கொண்டாடும் வழக்கமும் உள்ளது அமைச்சருக்குத் தெரியுமா என்று கேட்டார்.
அதற்கு அமைச்சர் வேலு, தமிழர்கள் விழா பற்றி அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். சூரியனை பார்த்து தான் பொங்கல் வைப்பது வழக்கம் என்று விளக்கினார்.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில், செங்கோட்டையன் தவறான தகவலைத் தருகிறார். தை முதல் நாளில் சூரியனுக்குப் படைத்தும், அடுத்த நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதும்தான் வழக்கத்தில் உள்ளது. மேலும் மாட்டுப் பொங்கலன்று மாலை நேரத்தில்தான் பொங்கல் வைப்பார்கள். ஏன் செங்கோட்டையன் இரவிலேயே இருக்கிறார். செங்கோட்டையன் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றார்.
அமைச்சர் பொன்முடி கூறுகையில், நாங்கள் நாம் கொண்டாடும் பொங்கலைப் பற்றி கூறுகிறோம். அவர் அவர்களது பொங்கலைப் பற்றி கூறுகிறார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.