மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புத்தாண்டு அன்று தன்னை சந்திக்க வந்த பத்திரிக்கை நிருபர்களிடம், “நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள்” என்று கூறியதாக தகவல் பரவியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை. சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், தொடரும் ஊழல் பிரச்சனைகளால் கட்சியின் மதிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தி.மு.க., வினர் இடையே குமுறல்கள் எழுந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையால், தி.மு.க., வின் சாதனைகள் அனைத்தும் அழிந்து வருகிறது. அதனால் ராஜாவின் அமைச்சர் பதவியை பறித்தது போலவே, கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் பதவியையும் பறித்து, அவரை கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
மேலும், தமிழக அமைச்சர் பூங்கோதையின் பதவியையும் பறிக்க வேண்டும். கனிமொழிக்கு கட்சியில் கொடுத்து வரும் முக்கியத்துவத்தினை குறைக்க வேண்டும். சென்னையில் நடைபெறுவதாக இருந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது போன்ற பல கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர் அழகிரி, முதல்வரிடம் வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, ராஜாவின் கட்சிப் பதவியை நாமாக பறித்தால் அவர் செய்த ஊழலினை நாமே முன்வந்து ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும். அதனால், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை, சி.பி.ஐ., விசாரணை, உச்ச நீதிமன்ற முடிவு இதையெல்லாம் பார்த்து விட்டு நாம் முடிவெடுப்போம். என தி.மு.க., கட்சித் தலைமை அழகிரியை சமாதானப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று தன்னை சந்திக்க வந்த நிருபர்களிடம், நான் அமைச்சர் பதவியை ராஜிமானா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள் என்று கூறியதாகவும், இது குறித்த கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் அவர் அனுப்பியதாக வதந்தி பரவியுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 3ம் திகதி பின் நேரப்பொழுதின் போது, மதுரையில் இருந்து சென்னை சென்ற அழகிரி முதல்வரைச் சந்தித்தார். அப்போது, தன் மூன்று கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். இதை கட்சியின் உயர் மட்டக்குழுவினை கூட்டித் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறிய முதல்வர், அவசர அவசரமாக உயர் மட்டக்குழுவினை கூட்டியதாக தி.மு.க. வட்டாரங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
முதல்வரின் பதிலால் சமாதானமடையாத அழகிரி உயர் மட்டக்குழுவை புறக்கணித்து விட்டு மதுரைக்குச் சென்றுவிட்டார். இருப்பினும், உயர் மட்டக்குழு தொடர்ந்தது. அதில், அழகிரியின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விடயத்தில் உடனடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பொதுக்குழுவினை கூட்டலாம் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதனால், பிப்ரவரி 3ம் திகதி தி.மு.க., பொதுக்குழு கூடுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.