சேலம் மாநாட்டில், தொண்டர்கள் மத்தியில் தேமுதிகவின் கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். தொண்டர்களின் கருத்தை அறிந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கவுள்ளார் விஜயகாந்த் என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சேலத்தில் வருகிற 9ம் தேதி தேமுதிகவின் முதலாவது மாநில மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா வந்திரு்நதார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கில் திரண்டு இருக்கும் தொண்டர்கள் மத்தியில், கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த், வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து அறிவிக்கிறார்.
அதன் மூலம் தமிழக மக்களின் உரிமை பாதுகாக்கப்படும். மக்களின் நலன் காக்கப்படும். அந்த வகையில் இந்த மாநாடு மக்களின் உரிமை மீட்பு மாநாடாக அமைவது உறுதி. தே.மு.தி.க. கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொண்டர்களின் கருத்துகளுக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அமைந்துள்ள மாற்றமாகும்.
தே.மு.தி.க. கட்சி தலைவர் எடுக்கும் அனைத்து முக்கிய முடிவுகள் எல்லாமே தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே எடுக்கப்படுகின்றன. மேலும் அந்த முடிவுகளை எல்லாம் அவர்கள் தொண்டர்கள் மத்தியில்தான் அறிவிக்கவும் செய்கிறார். அந்த வகையில்தான் கூட்டணி குறித்த முடிவையும் அவர் தொண்டர்கள் மத்தியில் அறிவிக்கிறார் என்றார்.
இதற்கிடையே, மாநாடு குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை நாம் சந்திக்க உள்ளோம். நம்முடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் நம் மீது பற்றும், பாசமும் கொண்டுள்ள பொதுமக்களையும் இந்த மாநாட்டிற்கு நீங்கள் அழைத்து வர வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் நமது மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்வதன் மூலம் நம்மைப்பற்றியும், நம்முடைய லட்சிய பாதையை பற்றியும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்துகொள்வதற்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மாநாடு ஜனவரி 9-ந் தேதி தானே என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். மாநாட்டிற்கு முன்கூட்டியே வந்து சேருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மாநாடு வெற்றியடைய வேண்டும் என்று எவ்வளவு ஆர்வமும், அக்கறையும் நமக்கு உள்ளதோ அதைப்போல மாநாட்டில் கலந்துகொள்கின்ற தொண்டர்களும், ஆதரவாளர்களும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதில் நான் கண்ணும், கருத்துமாக இருக்கிறேன். மாநாடு முடிவடைந்த பிறகு காத்திருந்து பொறுமையாக தங்கள் இருப்பிடங்களுக்கு பத்திரமாக செல்ல வேண்டுவதும் தலையாய கடமையாகும். இந்த நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் விஜயகாந்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.