மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஒழிக்காமல் பிரச்னைக்குரியவர்களை ஒழிக்க நினைப்பது எந்த விதத்திலும் ஜனநாயகம் இல்லை.
இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் தேச துரோகம் செய்ததாகத் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு ஆயுட் தண்டனை விதித்துள்ளது.
மாவோயிய கிளர்ச்சிக்காரர்களின் வலயமைப்பு உருவாக பினாயக் சென் உதவினார் என்று கீழ் நீதிமன்றத்தால் குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல மருத்துவரான பினாயக் சென் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின ஏழை மக்களுக்காக மருத்துவ உதவி மையங்களை நடத்திக் கொண்டிருந்தார்.
அவருடைய சேவைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. கைதாகி வழக்கு நடத்தப்படுவதற்காக சிறையில் அவர் காத்திருந்த சமயத்தில் மருத்துவ தொண்டுக்கான கௌரவம் மிக்க சர்வதேச விருது ஒன்று அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
நாராயண் சன்யால் என்ற மாவோயிய சிந்தாந்தவாதிக்கும் தலைமறைவாக வாழ்ந்து வந்த மாவோயிய கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் செய்திகளை எடுத்துச் சென்ற தூதுவராக பினாயக் சென் செயல்பட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
நாராயண சன்யால் மற்றும் கொல்கத்தா வியாபாரி பையுஷ் குஹா ஆகியோர் மீதும் தேச துரோகக் குற்றம் உறுதிசெய்யப்பட்டு ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் என்ற மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த பினாயக் சென், மாவோயியவாதிகளை ஒடுக்குவதற்காக அரசாங்கத்தால் அமைக்ககப்பட்ட அமைப்பு அட்டூழியங்கள் செய்திருந்ததாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பினாயக் சென் மேன்முறையீடு செய்வார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.