யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி மாணவர்கள் அனைவரும் சிங்களத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயமானது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நாளை காலை பிரதமர் டி.எம் ஜெயரட்ன தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஸ பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் படையினர் குடாநாடெங்கும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஒத்திகையின் போது யாழ் மாணவர்கள் தமிழில் தேசிய கீதம் பாட முற்பட்டமையினால் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்று கடும் அழுத்தங்கள் மாணவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றமையினால் அவர்களுக்கு தெரியாத மொழியில் திக்கு முக்காடிப் பாடுவதாக பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சி வகுப்புக்கள் நாமல் ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி