விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைக் கொல்ல விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கொழும்பில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரம்புக்வெலவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரம்புக்வெல, இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவகாரத்தில் இலங்கையிடம் உள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கோரினால் அதுகுறித்து அப்போது ஆய்வுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்ததும், அதற்கு இந்தியா முழுவீச்சில் தலையாட்டி வந்ததும் நினைவிருக்கலாம். இப்போது திடீரென புலிகள் பிரச்சினை தலைவிரித்தாடுவது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி