சென்னையில் கொலை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தலைமறைவு குற்றவாளிதான் என்றும், அப்படி அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் உடனடியாக அவர் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, தற்போது இலங்கையில் ராஜபக்சே அரசில் அமைச்சர் பதவி வகித்து வருகிறார். இவர் முன்பு இ.பி.ஆர்.எல்.எப் என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார்.
கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமறைவு குற்றவாளிகள்:
இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேரும் பின்னர் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக செசன்சு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து டக்ளஸ் தேவானந்தா உட்பட அனைவரையும் தலைமறைவு குற்றவாளிகளாக 30.4.94 அன்று அறிவித்தது.
இந்த நிலையில், சமீபத்தில் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு இலங்கை அமைச்சர் என்ற தகுதியில் வந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தொடர்ந்து நீடிக்கும் அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ரத்து செய்ய முடியாது… சரணடையுங்கள்!
இதைத்தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தன்னை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் பிறப்பித்த அறிக்கை, செய்தியாகத்தான் பத்திரிகையில் வெளிவந்ததே தவிர, முறையான விளம்பரமாக வெளியாகவில்லை என்றும், எனவே செசன்சு கோர்ட்டின் அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.
கொலை வழக்கை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரித்தார்.
அவர் பிறப்பித்த உத்தரவில், “இவர்களை தலைமறைவு குற்றவாளிகள் என்றுதான் செசன்சு கோர்ட்டு அறிவித்துள்ளதே தவிர பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என்று கோர்ட்டு அறிவிக்கவில்லை.
தலைமறைவு குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று 30.4.94 அன்று செசன்சு கோர்ட்டு வெளியிட்ட அறிவிப்பு செல்லத்தக்கதுதான். பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பது, இதற்கு அடுத்த நிலையில்தான். அதற்கான இறுதி உத்தரவுகளை செசன்சு கோர்ட்டு பிறப்பிக்கவில்லை.
கொலை வழக்கு விசாரணையில் இருந்தபோது, ஆஜராகாததால் இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே டக்ளஸ் தேவானந்தா இப்போது ஜாமீனில் இல்லை. அதனால் தலைமறைவுக் குற்றவாளியாக செசன்சு கோர்ட்டு அறிவித்ததை ரத்து செய்யத் தேவையில்லை.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்யலாம். மேலும், 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் அவர் சரண் அடைந்து தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு உள்ள பிடிவாரண்டை திரும்பப் பெற வேண்டும்.
அப்போது இவ்வளவு காலம் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதற்கான தகுந்த காரணங்களை எழுத்துப் பூர்வமாக அவர் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்தை செசன்சு கோர்ட்டு பரிசீலிக்க வேண்டும்…”, என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் ராஜபக்சேவுடன் டெல்லி வந்த டக்ளஸ் தேவானந்தா, பிரதமரிடம் கைகுலுக்கி பேசிவிட்டு பத்திரமாக இலங்கை திரும்பியது நினைவிருக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி