வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க அனைத்து ராஜதந்திரங்களையும், தேர்தல் நேரத்தில் கையாளுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டப் பகுதிகளை விஜயகாந்த பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நான் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவே அரசியலுக்கு வந்தேன். அரசியல் பண்ண வரவில்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. மழையால் தவிக்கும் மக்களுக்கு என்ன செய்யலாம் என்றில்லாமல் முதல்வரோ செம்மொழிப் பூங்காவை பார்க்கிறார், துணை முதல்வரோ அடையாறு பூங்காவை காட்டுகிறேன் என்கிறார்.
தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நான் எனது தொகுதியான விருத்தாச்சலத்திற்கு போகாமல் இங்கே வந்திருப்பது ஓட்டுக்காக அல்ல மக்களுக்காக. தமிழகத்திலேயே மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்டம் தான். அதனால் தான் இங்கு வந்து பார்வையிட்டேன்.
இங்கு அரசு பாதள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் தான் தண்ணீர் தேங்கியிருப்பதாக மக்கள் தெரிவி்த்தனர். இங்கு சுகாதார வசதியும், சாலை வசதியும் இல்லை என்பதை கண்கூடாகப் பார்த்தேன். பெரும்பாபாலான இடங்களி்ல் குடிசைகள் தான் இருக்கிறது. இதையெல்லாம் முதல்வர் எப்பொழுது தான் கல்வீடாக்குவாரோ?
மத்திய அரசு பேரிடர் நிதி ஒதுக்கவில்லை என்பதில் உண்மையில்லை. முதல்வர் தான் மட்டும் பணக்காரராக இருந்தால் தனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு உதவுவதாக சொல்கிறார். பெரியார் வழியில் நடக்கிறேன் என்கிறார். பெரியார் பணக்காரர். அவர் தனது சொத்தையெல்லாம் மக்களின் நலனுக்காக செலவளித்தவர். நம் முதல்வரோ சொத்துக் கணக்கை கேட்டால் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலம் தாழ்ததாமல் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கிடையில் முதல்வர் இளைஞன் பட கேசட் வெளியீட்டு விழாவுக்குச் செல்கிறார். குடும்ப உறுப்பினர்களுக்காக பதவியில் இருக்கும் முதல்வர் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மத்திய அரசு தீர விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என்று புரியவில்லை. ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கைகள் எடுத்தால் தான் குற்றங்கள் குறையும் என்றார்.
கேள்வி: வரும் சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவீறீர்களா?
பதில்: அது ரகசியம்.
கேள்வி: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?
பதில்: வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க அனைத்து ராஜதந்திரங்களையும் தேர்தல் நேரத்தில் கையாளுவேன் என்றார் விஜய்காந்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி