கடும் எதிர்ப்பையும் மீறி லண்டன் வந்துள்ள ராஜபக்சேவுக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால், ராஜபக்சேவை விமான நிலையத்தின் வேறு பகுதி வழியாக போலீஸார் வேகமாக அழைத்துச் சென்றனர். இதனால் ஹீத்ரூ விமான நிலையமே பரபரப்பானது.
உலகிலேயே மிகவும் பரபரப்பான, பிசியான ஹீத்ரூ விமான நிலையத்தை நேற்று தமிழர்களின் ‘படையெடுப்பு’ பெரும் பரபரப்பாக்கி விட்டது. ஒரு நாட்டின் தலைவரை இப்படி புறவாசல் வழியாக கூட்டிச் சென்றது ஹீத்ரூ விமான நிலைய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. லண்டனுக்கு இனி ஒரு சிங்களத் தலைவர் படு சுதந்திரமாக வந்து போவது எளிதான காரியமல்ல என்பதை ஈழத் தமிழர்கள் நேற்று ராஜபக்சேவுக்குக் காட்டி விட்டனர்.
ராஜபக்சே இங்கிலாந்து நேரப்படி நேற்று இரவு 9.50 மணிக்கு லண்டன் போய்ச் சேர்ந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள் விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் திரண்டிருந்தனர். தமிழீழ கொடிகளை ஏந்தியபடியும், போர்க் குற்றவாளி ராஜபக்சேவே இங்கிலாந்துக்குள் வராதே என்று கூறும் வாசகங்கள எழுதிய பதாகைகளையும் தாங்கியபடி அனைவரும் அமைதியாக காத்திருந்தனர்.
யாரும் எதிர்பாராத அளவுக்கு தமிழர்கள் பெருமளவில் கூடியிருந்ததால் ராஜபக்சேவின் வருகை தாமதப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாக அவர் வந்து சேர்ந்தார். தமிழர்கள் பெருமளவில் கூடியிருந்தபோதும் எந்தவித பிரச்சினையும் தராமல் போராட்டத்தை நடத்தினர். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவே திரும்பிப் போ என்று கூறி உரத்த குரலில் அவர்கள் போட்ட கோஷத்தால் விமான நிலைய வரவேற்புப் பகுதியே மிரண்டு போனது.
முதலில் போலீஸார் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். ஆனால் தமிழர்களின் உணர்ச்சிகளைப் பார்த்தோ என்னவோ, போராட்டத்தை தொடர அனுமதித்தனர். அதேசமயம், போலீஸாருக்கு வேலை இல்லாத வகையில் மிகவும் கட்டுக்கோப்பாகவும், அமைதியாகவும் போராட்டம் நடந்தது.
தமிழர்கள் பெருமளவில் கூடியிருந்த பகுதி வழியாக ராஜபக்சேவை அழைத்து வராமல் வேறு ஒரு பகுதி வழியாக ராஜபக்சேவை போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கும் பெரும் திரளான தமிழர்கள் கூடி விட்டதால் தமிழர்களின் எதிர்ப்பைக் காணாமல் போகும் ராஜபக்சேவின் திட்டம் பலிக்கவில்லை. இருப்பினும் ராஜபக்சே கார் மறிக்கப்படும் நிலை உருவாகி விடாமல் தடுக்கும் வகையில் அங்கு கூடியிருந்த தமிழர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி ராஜபக்சே காரை போக விட்டனர். கிட்டத்தட்ட தப்பித்தோம், பிழைத்தோம் என்ற கணக்கில்தான் விமான நிலையத்தை விட்டு ராஜபக்சேவால் வெளியேற முடிந்தது.
அதேசமயம், ராஜபக்சேவுடன் வந்த சிங்களக் குழுவினர் மிகவும் பீதி அடைந்த முகத்துடன் படு பதட்டமாக அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும் காண முடிந்தது.
தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த அதிரடிப் போராட்டத்தை நடத்தினர். செல்போன் மூலம் சக தமிழர்களுக்குத் தகவல் கூறி விமானம் வரும் நேரத்தில் அனைவரையும் திரட்டி அதிர வைத்தனர்.
லண்டனில் தற்போது பூஜ்யத்திற்கும் குறைவான கடும்குளிர் அடிக்கிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தமிழர்கள் திரண்டு வந்திருந்தது விமான நிலையத்திற்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தப் போராட்டம் குறித்து ஒரு தமிழர் கூறுகையில், இங்கிலாந்து பிரஜைகளான நாங்கள், இந்த நாட்டுக்குள் ஒரு போர்க்குற்றவாளி வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று எங்களது அரசுக்கு உணர்த்தவே இப்போராட்டத்தை நடத்தினோம்.
40 ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்ற ஒரு கொலையாளி, போர்க்குற்றவாளி இலங்கையின் அதிபர் என்பதை இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம் என்றார்.
மிகப் பெரிய அளவில் தமிழர்கள் திரண்டு நின்றதைப் பார்த்த பலரும் தங்களது செல்போன்களில் அவர்களை ஆர்வத்துடன் படம் எடுத்தனர். பலர் போராட்டம் நடத்தியவர்களிடம் வந்து பேசி என்ன என்று கேட்டறிந்து கொண்டனர்.
தனிப்பட்ட பயணமாக ராஜபக்சே லண்டன் வந்துள்ளார். டிசம்பர் 2ம் தேதி அவர் ஆக்ஸ்போர்ட் யூனியனில் பேசவுள்ளார். லண்டனிலேயே மிகவும் சொகுசான, ஆடம்பரமான டோர்சஸ்டரில் ராஜபக்சேவும், அவருடன் வந்திருப்பவர்களும் தங்குகின்றனர்.
தமிழர்கள் மட்டுமல்லாமல் லண்டன் வாழ் சிங்களர்களும் கூட ராஜபக்சே மீது அதிருப்தியில் உள்ளனர். அதற்குக் காரணம், தங்களது ‘மாவீரனான’ பொன்சேகாவை சிறையில் போட்டு பூட்டி வைத்திருப்பதால் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி